அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாள் விழா, 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கொண்டாடப்பட்டது.
கட்சியின் நகர செயலாளர் செய்யது காசிம் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், அதிமுக நகர நிர்வாகிகளுள் ஒருவருமான அ.வஹீதா, அதிமுக சிறுபான்மைப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், சிறுபான்மைப் பிரிவு நகர செயலாளர் எஸ்.எம்.அப்துல் காதிர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, கட்சிக் கொடியேற்றி, 500 பேருக்கு அன்னதானம் அளித்து, வாழ்த்துரை வழங்கினார்.
எம்.எல்.இல்யாஸ் நன்றி கூறினார். இவ்விழாவில், கட்சியின் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நகர அதிமுக செயலாளர் செய்யது காசிம் தலைமையில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற குழுவினர், அங்குள்ள உள்நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |