குவைத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், நகர்நலப் பணிகளாற்றும் KEPA, MICROKAYAL அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இம்மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் Salmiyaவிலுள்ள - மன்ற உறுப்பினர் வி.என்.எஸ். அப்துல் ரஹ்மான் (ஷில்லி) இல்லத்தில் சிறப்பாக நடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
அமீரகத்திலிருந்து பணி நிமித்தம் குவைத் வந்திருந்த எம்.கே.டி.முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாணவர் எம்.எம்.ஷேக் நூர்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மன்றத் தலைவர் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா துவக்கமாக உரையாற்றினார். காயல்பட்டணம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நடத்தி வரும் நமதூர் வாழ்வு உரிமைப் போராட்டத்தைப் பாராட்டி பேசிய அவர், அதற்கு ஒவ்வொரு காயலனும் ஆதரவு கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அடுத்ததாக, காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக இணையதளம் மூலமாக நிதி சேகரித்து உதவி வரும் மைக்ரோ காயல் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசிய அவர், அதில் அனைத்து உறுப்பினர்களும் தங்களை இணைத்துக் கொண்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி, ஏழை-எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - சிறப்பு விருந்தினர் எம்.கே.டி.முஹ்யித்தீன் உரையாற்றினார். நகர்நலப் பணிகள் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நகர பட்டதாரிகளின் விபரப் பட்டியல்களை சேகரித்து database உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
பின்னர், மருத்துவ உதவி கோரி அண்மையில் மன்றத்தால் பெறப்பட்ட மூன்று விண்ணப்பங்களுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் வீதம், மொத்தம் முப்பதாயிரம் ரூபாய் உதவி வழங்கியமை மற்றும் கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்த ஒரு சகோதரிக்கு ரூபாய் 9,500 வழங்கியமை குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்களின் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களையடுத்து, காயல்பட்டினம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நடத்தி வரும் நமதூர் வாழ்வுஉரிமை போராட்டத்தைப் பாராட்டி, KEPAவிற்கு முழு ஆதரவை வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துஆ கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் பெண்கள் தமக்கிடையில் கலந்துரையாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மழலையரும், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நன்கு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு, குவைத் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
KARAFI முஹம்மத் அலீ
துணைச் செயலாளர்
காயல் நல மன்றம்
குவைத் |