காயல்பட்டினம் நகர்மன்ற (பிப்ரவரி மாத) சாதாரண கூட்டத்தில், பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காரணத்தால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் 26.02.2013 செவ்வாய்க்கிழமையன்று (இன்று) காலை 11.20 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
02ஆவது வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர். துவக்கமாக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் கைச்சான்று பெறப்பட்டது.
இக்கூட்டத்தில், பின்வருமாறு கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது:-
துவக்கமாக, கூட்டம் துவங்குவதாகவும், அனைவரும் ஒத்துழைக்குமாறும் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டப்பொருட்கள் வாசிக்க ஆயத்தமான நேரத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் எழுந்து பேசினார்.
தலைவி அவர்கள் எங்கள் அத்தனை கவுன்சிலர்கள் மீதும் சி.எம்.ஏ. அலுவலகத்தில் கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருக்காங்க... அதன் மீது நடவடிக்கையும் கோரியிருக்கிறாங்க... இத்தனை காலமாக பலமுறை ஒத்துழைப்பு கொடுத்தும் எந்தப் பணியும் நடைபெறவில்லை... பலமுறை ஆலோசனைகளை அவர்களிடம் சொன்னோம்... கேட்கவேயில்லை...
இன்னும் மூன்றரை வருடங்கள் உள்ளன... இப்படியே இருந்தால் இந்த ஊருக்கு ஒன்றுமே நடக்காது! நாங்கள் மக்கள் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறோம்... அவர்கள் தனியாக ஈடுபடுகிறார்கள்... எங்கள் மீது அவர்கள் கொடுத்த கம்ப்ளெய்ண்ட் அடிப்படையில் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்!
உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்... அதனால், இனிமேல் உங்கள் தலைமையில் கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி வெளிநடப்பு செய்கிறோம்...
இவ்வாறு, எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் பேசி முடிக்க, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கூட்டரங்கை விட்டும் வெளியேறிச் சென்றனர்.
இதனையடுத்து, தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித் உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்வுகளின் அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக! |