காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள CA 007 என்ற எண்ணுடைய நியாய விலைக் கடையில், இன்று நண்பகல் 12.35 மணியளவில், மண்ணெண்ணெய் பதுக்கப்படுவதாக இக்கடைக்குட்பட்ட வாடிக்கையாளர்கள் சிலர் நமக்கு தகவலளித்தனர்.
அதனடிப்படையில், 12.40 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, மண்ணெண்ணெய் பேரல்கள் வைக்கப்பட்டிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறைக்குள், இக்கடைக்குத் தொடர்பில்லாத ஒருவர், உறையிட்டு மூடப்பட்ட மண்ணெண்ணெய் கேனைத் திறந்து காண்பிக்க, இக்கடையில், பெருமாள் என்றழைக்கப்படும் - சரக்கு வினியோகப் பொறுப்பிலிருக்கும் அலுவலர் பேரலிலிருந்து மண்ணெண்ணெய்யை அள்ளி ஊற்றி கேனை நிறைத்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக படமெடுத்துக்கொண்டு, இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, மண்ணெண்ணெய் பேரல் ஓட்டையாக இருந்த காரணத்தால் கேனில் ஊற்றுவதாகக் கூறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேனில் ஊற்றப்பட்ட மண்ணெண்ணெய்யை மீண்டும் பேரலில் ஊற்றினார்.
இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கடையில் பதிவுப் பொறுப்பிலுள்ள கல்யாணி என்றழைக்கப்படும் அலுவலர், காவலுக்கு நிற்பது போன்று வெளியில் நின்றுகொண்டிருந்தார்.
இந்நடவடிக்கைகள் சந்தேகமளித்ததையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பஷீருக்கு தொலைபேசி வழியே முறையிடப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், மதியம் 02.45 மணியளவில் கடைக்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர், கடையிலுள்ள பதிவேடுகளைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது போக இருப்பில் இருக்க வேண்டிய அளவுக்கு மண்ணெண்ணெய் கடையில் உள்ளதாகவும், நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே தகவல் தெரிவித்திருந்தால், உடனடியாகப் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறினர்.
உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையும், அலுவலர்கள் வந்து சேருவதற்குள் நிகழ்வு நடைபெற்று முடிந்துவிட்டதாகவும் அவருக்கு உணர்த்தப்பட்டது. பின்னர், இந்நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சி அலுவலருக்குக் காண்பிக்கப்பட்டது. பூட்டிய அறைக்குள், இக்கடைக்குத் தொடர்பில்லாத ஒருவருக்கு மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படுவது எப்படி என்று கேட்கப்பட்டதற்கு, வட்ட வழங்கல் அலுவலர் எந்த பதிலையும் தரவில்லை. |