காயல்பட்டினம் நகராட்சியில் நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் பிப்ரவரி 16 - சனிக்கிழமை - அன்று நடைபெற்றது. காலை 11
மணி அளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அசோக்
குமார், ஓவர்சீயர் செல்வமணி, நகர்மன்ற உறுப்பினர்கள், நில உரிமையாளர்கள், நில விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும்
பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
டிசம்பர் மாதம் நடந்த நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (தீர்மானம் எண் 425) அடிப்படையில் கூட்டப்பட்டுள்ள
இந்த கூட்டத்தின் நோக்கம் குறித்து நகர்மன்றத் தலைவர் விளக்கி பேசினார். தொலைநோக்கு பார்வையில் நகர கட்டமைப்பு முறையாக அமைந்திட -
நில உரிமையாளர்கள், தங்கள் மனைப்பிரிவில் (Layout) இடம் (Plot) வாங்கும் மக்கள், வீடு கட்டி குடியேறும்போது தேவைப்படும் பொது
வசதிகளுக்கான இடத்தினை நகராட்சிக்கு வழங்கிடும்படி கேட்டுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து நகராட்சி ஓவர்சியர் செல்வமணி - மனைப்பிரிவு குறித்த அரசு விதிகளை விளக்கினார். சாலைகளின் நீளம், நகராட்சிக்கு
செலுத்தவேண்டிய தொகைகள், வழங்கப்படவேண்டிய 10 சதவீத காலி இடம் (Open Space Reserve - OSR) குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பெருவாரியான நில உரிமையாளர்கள்/ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் -
அரசு விதிகளில் இருந்து நகராட்சிக்கு விதிவிலக்கு கேட்கலாம் என்றும், விதிமுறைகள் கூறுவது போல் இடம் ஒதுக்கினாலோ, வசதிகள்
வழங்கினாலோ - நில விலை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
ஒரு சிலர் - நில விற்பனை செய்வோர், அவர்களின் மனைப்பிரிவில் நிலம் வாங்கும் மக்களுக்கு, அரசு விதிகள்படி இடம் ஒதுக்கி, வசதிகள்
செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளவர்கள் என்றும், காயல்பட்டினத்திற்கு மட்டும் விதிவிலக்கு கோருவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தனர்.
சென்னை பகுதிகளில் மனைப்பிரிவுகள் விற்பவர்கள் - அரசு நிறுவனமான் Chennai Metropolitan Development Authority (CMDA) இல் ஒப்புதல் பெறவேண்டும் (Approved Plots). மாநிலத்தின் பிற பகுதிகளில் மனைப்பிரிவுகள் விற்பவர்கள் - அரசு நிறுவனமான் Directorate of Town and Country Planning (DTCP) இல் ஒப்புதல் பெறவேண்டும். காயல்பட்டினத்தில் விற்கப்படும் எந்த மனைப்பிரிவுகளும் DTCP ஒப்புதலுடன் விற்கப்படுவதில்லை (Unapproved Plots). இது குறித்து புதிய அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
புகைப்படங்கள் உதவி:
ஏ.கே. இம்ரான் |