காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் “அல்மக்தபத்துல் மகுதூமிய்யா” என்ற பெயரிலான மக்தப் மத்ரஸாவின் துவக்க நிகழ்ச்சி, இன்று - மார்ச் 01ஆம் தேதி மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து மக்தப் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் பொறுப்பாளர் ஹாஜி, ஏ.ஆர்.இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சர்வதேச மட்டத்திலும், நாடு தழுவிய அளவிலும் உருவாக்கப்பட்ட ‘தீனிய்யாத்’ மக்தப் பாடத்திட்டம், பல மொழிகளில் பல மாநிலங்களில் நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவ மாணவியர் மார்க்க ஒழுக்கம் சார்ந்தவர்களாக உருவாக்கப்படுகின்றனர். இந்த மக்தப் மதரசாக்களின் மூலம் ஒழுக்க சீர்கேடுகள் குறைந்துபோகும் சூழலைக் காணமுடிகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மக்தப் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நடைபெற்று வருகின்றன.
ஆரம்பக் கட்டமாக மும்பையில் நடைபெற்ற நாடு தழுவிய பயிற்சி முகாமில் ஒரு குழுவும், அடுத்த கட்டமாக பெங்களூருவில் நடைபெற்றுவரும் முன்மாதிரி மக்தப்களை பார்வையிடுவதற்காக ஒரு குழுவும், இறுதிக் கட்டமாக இவ்வாண்டு தொடக்கத்தில் கீழக்கரையில் நடைபெற்ற மாநில மக்தப் மாநாட்டில் பங்கேற்க ஒரு குழுவும் சென்று வந்தது.
முன்னரே ஜும்ஆ உரைகள், இணையதள கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூப்பட்டது.
ஆரம்பமாக நடைபெற்ற மக்தப் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் அறிஞர் பெருமக்கள் பலரும் மக்தபின் அவசியம் குறித்த தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர்.
இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவியர் இந்த மக்தப் பள்ளியில் சேர ஆர்வமாக முன்வந்துள்ளனர். இதற்கான நுழைவுப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். நுழைவுக் கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்திர கட்டணமாக ரூ 200 பெறப்படுகிறது. மாணவ மாணவியருக்கு பிரத்யேக சீருடை (பைஜாமா, தொப்பி), பாடப் புத்தகம், நாட்குறிப்பு (டைரி), பேக், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. தற்போது சுமார் 70க்கும் அதிகமான மாணவர்களும், 75 மாணவியரும் சேர்ந்துள்ளனர். மக்தப் பாடத்திட்டத்தைப் போதிப்பதற்கான ஆண், பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 04.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளியில் வைத்தும், மாணவியருக்கு பெண்கள் தைக்காவில் வைத்தும் துவக்க நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வகுப்புகளும் நடைபெறவுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் எல்லோரும் திரளாக வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்றைய தொடக்கவிழாவில், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரி துணை முதல்வருமான மௌலவி, காஜா முகைதீன் ஆலிம் காஷிஃபி, ஹாமீதிய்யா சன்மார்க்க சபை பேராசிரியர், மெளலவி, அல்ஹாஃபிழ், பாதுல் அஸ்ஹாப் ஆலிம் ஃபாஸி ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
மக்தப் முதல்வர், மௌலவி, அல்ஹாஃபிழ், அபூபக்கர் ஷாதுலி ஆலிம் ஃபாஸி மக்தப் அறிமுக உரையும் நிகழ்த்தவுள்ளார். மக்தப் ஆசிரியர்களாக மௌலவி, அல்ஹாஃபிழ், அப்பாஸ் ஆலிம் மௌலவி, அல்ஹாஃபிழ், முஹம்மது அலீ ஆலிம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். அவ்வாறே பெண்களுக்கான ஆசிரியைகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 17.02.2013 ஞாயிறன்று வகுப்புகள் அமைப்பதற்காக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கான சீருடை வழங்கப்பட்டு, வகுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மக்தப் மாநில தலைமையகமான ‘அன்வாருஸ் ஸுஃப்பா’வின் தென் மண்டல கண்காணிப்பாளர், மௌலானா, முஃப்தி, அமானுல்லாஹ் ஃபைஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பள்ளி நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். வெண் புறாக்களைப் போன்று மாணவர் இளம் சிட்டுக்கள் பள்ளியில் வந்து சீருடையுடன் காட்சியளித்தது எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
இவ்வாறு அவர் தனது விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.A.முஹம்மத் இப்ராஹீம் (48)
செய்தித் தொடர்பாளர், மக்தப் ஒருங்கிணைப்புக் கமிட்டி,
மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித், காயல்பட்டினம். |