பட்ஜெட் மேற்பார்வை காண இங்கு அழுத்தவும்
பட்ஜெட் முக்கிய அம்சங்கள் காண இங்கு அழுத்தவும்
பார்லிமென்டில் நேற்று (பிப்ரவரி 28) தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில், வருமான வரி விதிப்பில், எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை; கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது. இருந்தாலும், ஆறுதல் பரிசாக, முதன் முறையாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு, வருமான வரியில் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிகரெட், மொபைல் போன் மற்றும் உயர் ரக கார்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், 2009ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2வது முறையாக பதவியேற்றது. இந்த அரசின் கடைசியான, அதேநேரத்தில், முழு அளவிலான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைய, பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நேர்முக வரிகள் மூலம், 13 ஆயிரத்து, 300 கோடி மற்றும் மறைமுக வரிகள் மூலம், 4,700 கோடி என, கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படையான வருமான வரி வீதத்தில், எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், 2 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், தாங்கள் செலுத்தும் வரியில், 2,000 ரூபாயை குறைத்துக் கட்டும் வகையில், சிறிய வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால், வரி செலுத்துவோரில், 1.8 கோடி பேர் பலன் அடைவர். நாடு முழுவதும், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 42 ஆயிரத்து 800 பேர். இவர்கள் அனைவருக்கும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். அதேபோல, கம்பெனிகளும், 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ரூபாய், 50 லட்சத்திற்கு மேல், எந்த ஒரு அசையாச் சொத்தை ஒருவர் விற்பனை செய்தாலும், இனி, 1 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பில், விவசாயம் சார்ந்த விளை நிலங்களுக்கு மட்டும், விதி விலக்கு உண்டு. இறக்குமதி செய்யப்படும் உயர்ரக சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிகள் மற்றும் மோட்டார் படகுகள் மீதான, இறக்குமதி வரி, 75 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்கான, கலால்வரி, 27 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகளும் அதிகரிக்கும். புகையிலையில் தயாரிக்கப்படும், சிகரெட் மீது வரி விதிப்பது, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வழக்கமாக உள்ளது. அதேபோல், இந்த பட்ஜெட்டிலும், புகைப்பிடிப்போரின் பாக்கெட்டில் கைவைக்கும் வகையில், சிகரெட் மீதான கலால் வரி, 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மது அருந்த வசதி உள்ள, "ஏசி' உணவகங்களுக்கு மட்டுமே, இதுவரை சேவை வரி அமலில் இருந்தது. இனி, மது அருந்தும் வசதி இல்லா விட்டாலும், "ஏசி' உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படும். மேலும், 2,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட, மொபைல் போன்களுக்கு, தற்போது அமலில் உள்ள, 1 சதவீத கலால்வரி, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்களின் விலை உயரும். தரையில் பதிக்க பயன்படும் பளிங்கு கற்கள், ஆயத்த ஆடைகள், தரை விரிப்புகள் மற்றும் சணல் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் குறையும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும், தொழில்கல்வி வகுப்புகள் மற்றும் விவசாய பரிசோதனை வசதிகள் போன்றவற்றுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரி செலுத்தாமல், ஏமாற்றி வருவோர், தானாக முன்வந்து வரி செலுத்தும் வகையில், பொது மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், 10 லட்சம் பேர் வரி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், தண்ணீர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் ஊரக மேம்பாட்டிற்காக, நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை எடுத்துக் கொண்டால், வளர்ச்சி வீதம், 5 சதவீதத்திற்கு அதிகமாக உள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தோனேசியா மட்டுமே. அதனால், இந்தியாவின் வளர்ச்சிவீதம், மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிதிபற்றாக்குறை என்பது, 5.2 சதவீதமாக உள்ளது. இதை, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம், மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும், மொத்த விலை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் என்பது, 7 சதவீதம் வரை உள்ளது. உணவு பொருட்களின் மீதான பணவீக்கமே, அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய, உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என, மூன்று தரப்பினருக்கும், சில வகையில், பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டில்லி பாலியல் வன்முறைக்கு பலியான பெண்ணின் நினைவாக, "நிர்பயா' என்ற பெயரில், 1,000 கோடி முதலீட்டில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். பெண்களுக்கு என, தனியாக பொதுத்துறை வங்கி ஒன்றும், துவக்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இளைஞர்களுக்காக, 1,000 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமைகளை மேம்படுத்தும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முடிவில், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். ஏழைகளுக்கு வழங்கப்படும், மானிய உதவிகள் உள்ளிட்ட அனைத்துமே, நேரடியாக பயனாளிகளுக்கு, வங்கிகள் மூலமாக செலுத்தும் திட்டம் விரைவில், நாடு முழுவதும் அமலாகும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர போகுது ...
* மொபைல் போன்
* ஆடம்பர கார்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் அதிக வசதிகள் கொண்ட, உயர் ரக கார்கள்
* 800 சி.சி.,க்கு மேலான மோட்டார் பைக்குகள்* உல்லாச படகுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் படகுகள்
* சிகரெட்
* குளிர்சாதன வசதி உணவகங்களில் சாப்பிட...
* 50 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையா சொத்துக்களை விற்றால்...
* தரையில் பதிக்கப்படும் மார்பிள்கள்* இறக்குமதி கச்சா பொருட்களில் தயாரிக்கப்படும் பட்டு ஆடைகள்* "செட்-டாப்' பாக்ஸ்கள்
* பார்க்கிங் கட்டணம்* 1 கோடி ரூபாய்க்கு மேல் வீடு வாங்கினால்...
குறைய போகுது...
* வணிக முத்திரையிடப்பட்ட ஆயத்த ஆடைகள்
* விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள்
* தரை விரிப்புகள் மற்றும் சணலில் தயாரான தரையை மூட உதவும் பொருட்கள்
* உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் தானியம் மற்றும் உயர் ரக பருப்புகள்
* மரவள்ளிக் கிழங்கு
* வாகன அடிச்சட்டம்
கவர்ச்சியும் இல்லை; புதிய வரிகளும் இல்லை
* வருமான வரி வீதங்களில் மாற்றம் இல்லை
* 2 - 5 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, 2,000 ரூபாய் வரிச்சலுகை
* 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கு, 10 சதவீதம் கூடுதல் வரி
* முதல் முறை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, 1 லட்ச ரூபாய் வட்டி சலுகை
* 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆண்களும், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களும், வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரலாம்
* நெசவாளர்களின் கடன்களுக்கு, 6 சதவீத வட்டிச் சலுகை
* ராணுவத்திற்கு, 2 லட்சத்து 3 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* விவசாய கடன்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் கடன்
* புகையிலை பொருட்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும்
* ராஜிவ் சேமிப்பு திட்டத்தின் அதிகபட்ச வருமான வரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 12 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு
* நாட்டின் முதல் பெண்கள் வங்கி, அக்டோபரில் துவக்கப்படும்
* ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம், கை ரிக்ஷா இழுப்பவர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் போன்றோருக்கும் விஸ்தரிப்பு
* 1,000 கோடி ரூபாயில், "நிர்பயா' நிதியம்
* நிதிப் பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும்
* திட்டச் செலவிற்கு, 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய்; திட்டமில்லா செலவுக்கு, 11 லட்சத்து 9,975 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* புதிய வரிகள் மூலம், 18 ஆயிரம் கோடி வசூல்
* சேவை வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டம்
* பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி நிதியுதவி
* சிறுதொழில் நிதியுதவி நிறுவனமான, "சிட்பி'யின் மறு நிதிக்கு, 10 ஆயிரம் கோடி நிதி
* சி.எஸ்.டி., முதற்கட்ட இழப்பீடாக, மாநிலங்களுக்கு, 9,000 கோடி ரூபாய்
* தேசிய உணவு பாதுகாப்பு தவணைத் தொகை, 10 ஆயிரம் கோடியாக நிர்ணயம்
* அடிப்படை உற்பத்தி வரி, சேவை வரியில் மாற்றமில்லை
* கையாலான தரை விரிப்பு, சணல், கயிறு தரை விரிப்புக்கு சுங்க வரி விலக்கு
பட்ஜெட் மேற்பார்வை காண இங்கு அழுத்தவும்
பட்ஜெட் முக்கிய அம்சங்கள் காண இங்கு அழுத்தவும்
தகவல்:
தினமலர் |