சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் இம்மாதம் 05ஆம் தேதியன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கக் கோரி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.ப்ரகாஷ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.செய்யித் காமில் ஸாஹிப், ஜஸ்டின் செல்வராஜ், பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ், யு.சுதிர் லோதா, கே.கலாமணி, சர்தார் மணிஜித் சிங் நாயர் ஆகியோரடங்கிய குழு, 04.03.2013 முதல் 06.03.2013 வரையிலான நாட்களில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு 04.03.2013 மற்றும் 06.03.2013 ஆகிய நாட்களில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களுக்கும் வருகை தந்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறியவுள்ளனர்.
சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்து மக்கள் பிரதிநிதிகளையும் 05.03.2013 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து, சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துக்களைக் கேட்டறியவும் உள்ளனர்.
அவ்வமயம், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து, தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |