அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற மார்ச் 4ம் தேதியன்று (திங்கட்கிழமை), தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டசாமி பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இருப்பதால், மேற்படி மாசி மாதம் 20ஆம் நாள் (04.03.2013 திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி 04.03.2013 அன்று மாவட்டம் முழுமைக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். எனினும், அன்றைய தினம் அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Under Negotiable Instrument Act, 1881) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
04.03.2013 அன்று பொது விடுமுறை நாளல்ல என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குபதிலாக 13.04.2013 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தகவல்:
www.tutyonline.net |