காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் “அல்மக்தபத்துல் மகுதூமிய்யா” என்ற பெயரிலான மக்தப் மத்ரஸா மார்ச் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
முன் முயற்சிகள்:
சர்வதேச மட்டத்திலும், நாடு தழுவிய அளவிலும் உருவாக்கப்பட்ட ‘தீனிய்யாத்’ மக்தப் பாடத்திட்டம், பல மொழிகளில் பல மாநிலங்களில் நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவ மாணவியர் மார்க்க ஒழுக்கம் சார்ந்தவர்களாக உருவாக்கப்படுகின்றனர். இந்த மக்தப் மதரசாக்களின் மூலம் ஒழுக்க சீர்கேடுகள் குறைந்துபோகும் சூழலைக் காணமுடிகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மக்தப் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நடைபெற்று வந்தது.
அதன் துவக்க முயற்சியாக, மும்பையில் நடைபெற்ற நாடு தழுவிய பயிற்சி முகாமில் ஒரு குழுவும், அடுத்த கட்டமாக பெங்களூருவில் நடைபெற்று வரும் முன்மாதிரி மக்தப்களை பார்வையிடுவதற்காக ஒரு குழுவும், நிறைவாக இவ்வாண்டு துவக்கத்தில் கீழக்கரையில் நடைபெற்ற மாநில மக்தப் மாநாட்டில் பங்கேற்க ஒரு குழுவும் சென்று பார்வையிட்டு வந்தது.
முன்னரே ஜும்ஆ உரைகள், இணையதள கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூப்பட்டது.
ஆரம்பமாக நடைபெற்ற மக்தப் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் அறிஞர் பெருமக்கள் பலரும் மக்தபின் அவசியம் குறித்த தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர்.
மாணவர் சேர்க்கை:
இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவியர், அதற்கான நுழைவுப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து, மக்தப் வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். நுழைவுக் கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்திர கட்டணமாக ரூ 200 பெறப்படுகிறது. மாணவ மாணவியருக்கு பிரத்யேக சீருடை (பைஜாமா, தொப்பி), பாடப் புத்தகம், நாட்குறிப்பு (டைரி), பேக், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. தற்போது சுமார் 70க்கும் அதிகமான மாணவர்களும், 75 மாணவியரும் சேர்ந்துள்ளனர். மக்தப் பாடத்திட்டத்தைப் போதிப்பதற்கான ஆண் -, பெண் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
மக்தப் துவக்க நிகழ்ச்சி:
புதிய வகுப்புகள் 01.03.2013 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளியில் வைத்தும், மாணவியருக்கு பெண்கள் தைக்காவில் வைத்தும் துவக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முத்துவாப்பா ஃபாஸீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ‘நாவலர்’ ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம், மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற துவக்க விழாவில், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி துணை முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹாப் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்தப் முதல்வர், மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸி மக்தப் அறிமுக உரை நிகழ்த்தினார்..
அதனைத் தொடர்ந்து, மக்தப் வகுப்பின் புதிய மாணவர்களுக்கு மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ துவக்கப் பாடத்தை முறைப்படி துவக்கிக் கொடுத்தார். திருமறை குர்ஆனின் ‘சூரா அல் ஃபாத்திஹா’ துவக்க அத்தியாயத்தை அவர் முன்மொழிய, அனைத்து மாணவர்களும் ஒரே குரலில் அதனை வழிமொழிந்து தமது பாடத்தைத் துவக்கினர்.
மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் நன்றி கூற, ஜாவியா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு பேராசிரியரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுடன் துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
இத்துவக்க நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்தப் ஆசிரியர்களாக மௌலவி, அல்ஹாஃபிழ், அப்பாஸ் ஆலிம் மௌலவி, அல்ஹாஃபிழ், முஹம்மது அலீ ஆலிம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். அவ்வாறே பெண்களுக்கான ஆசிரியைகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். |