இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட ஊழியர் கூட்டம், இன்றிரவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட ஊழியர் கூட்டம், இன்று (05.03.2013) செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெறுகிறது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா தலைமையிலும், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்,
வரும் மார்ச் 10ஆம் தேதி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளன்று, மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பிறைக்கொடி ஏற்றல்,
ஏப்ரல் 02ஆம் தேதியன்று, தனி இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் சார்பில் - நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படவிருக்கும் கவன ஈர்ப்புப் பேரணி
உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |