இம்மாதம் 03ஆம் தேதி நடைபெறவுள்ள - மலபார் காயல் நல மன்ற (மக்வா) செயற்குழுவுக்கான தேர்தலில் மொத்தம் 24 பேர் போட்டியிடவுள்ளதாக அதன் நடப்பு பருவத்திற்கான கடைசி செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) நடப்பு பருவத்திற்கான 50ஆவது மற்றும் கடைசி செயற்குழுக் கூட்டம், 28.02.2013 வியாழக்கிழமை இரவு 08.15 மணிக்கு, மக்வா அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்ற துணைத்தலைவர் கே.ஆர்.எஸ்.ரஃபீக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
நடப்பு செயற்குழுவின் நன்றியறிவிப்பு:
நடப்பு செயற்குழுவின் கடைசி கூட்டத்தில் இருப்பதாகக் கூறிய அவர், தம் குழுவினரின் பொறுப்புக் காலத்தில், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு முழு மனதோடு உதவி - ஒத்துழைப்புகளை நல்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
புதிய செயற்குழுவிற்கான தேர்தல்:
அடுத்து, மன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 03.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன், புதிய செயற்குழுவிற்கான தேர்தலில் இறுதிப் பட்டியலின் படி, 24 பேர் போட்டியிடுவதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நாளன்று அனைத்து உறுப்பினர்களும் முற்கூட்டியே நிகழ்விடம் வந்து, புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்குமாறு மன்றத்தின் சார்பில் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நலத்திட்ட உதவிகள்:
பின்னர், நகர்நலன் குறித்த உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 5 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு 35,000 ரூபாய் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானமியற்றப்பட்டது.
அத்துடன், தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பணிகளுக்கான பொறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் - இரவு 10.45 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, மக்வா செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |