காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 25ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிம், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியும் மோதின.
ஆட்டம் துவங்கியது முதல் பெங்களூரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. போட்டி துவங்கிய 07ஆவது நிமிடத்திலேயே பெங்களூரு அணி வீரர் வித்தேஷ் முதல் கோலை அடித்து, அணியின் கோல் கணக்கைத் துவக்கி வைத்தார். அதன் பிறகு, முதற்பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில், 61ஆவது நிமிடத்தில், பெங்களூரு வீரர் அஷோக் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. காயல்பட்டினம் வீரர்கள் தடுப்பாட்டத்தை மட்டுமே கைக்கொண்டு, தாக்குதல் ஆட்டத்தைக் கைவிட்டனர்.
இவ்வாறிருக்க, ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிலையில், காயல்பட்டினம் வீரர்கள் பந்தை உதைத்தவாறே திடீரென முன்னேறிச் செல்ல, அந்த அணி வீரர் இஸ்மாஈல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
அதன்பிறகு, ஆட்டம் முடிவடையும் வரை, ஈரணிகளும் கோல் எதவும் அடிக்காததால், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணி, 2-1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியை வென்று, இம்மாதம் 27ஆம் தேதியன்று நடைபெறும் 4ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது..
நேற்றைய போட்டியில் உள்ளூர் அணி விளையாடியதால், ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
நேற்றைய போட்டியின்போது, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் அவரது கணவர் ஷேக் ஆகியோர் மைதானத்திற்குள் வந்தனர். ஆட்டம் முடிவடையும் வரை இருக்கையில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார். ஆட்டம் நிறைவுற்றதும், காயல்பட்டினம் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை சந்தித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், இந்த அணியினர் தேசிய அளவில் விளையாடி, உலகப் புகழ் பெற வேண்டுமென வாழ்த்திய பின் விடைபெற்றார்.
இன்று மாலையில் நடைபெறும் போட்டியில், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதுகின்றன.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 14:21 / 26.05.2013] |