காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், மதுரை விக்ரம் பொறியியல் கல்லூரி அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.
இரு அணிகளும், துவக்கம் முதல் சம பலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். முதற்பாதி ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் தீன் முல் கோலை அடித்து, கணக்கைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தில் வேகம் கூடியது.
இரண்டாவது பாதியில், 47ஆவது நிமிடத்தில், மதுரை விக்ரம் பொறியியல் கல்லூரி அணி வீரர் ஜெயமுருகன் ஒரு கோல் அடிக்கவே ஈரணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.
அதன்பிறகு, ஆட்டம் முடிவடையும் வரை, ஈரணிகளும் கோல் எதவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, 4-3 என்ற கோல் கணக்கில் மதுரை விக்ரம் பொறியியல் கல்லூரி அணியை வென்றது. காயல்பட்டினம் அணிக்காக, ஜமால், அஃப்ரஸ், ஃபாரூக், அமீர் ஆகிய வீரர்களும், மதுரை அணிக்காக, யுவராஜ், செல்வமணி, கார்த்திக் ஆகிய வீரர்களும் சமனுடைப்பின்போது கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று மாலையில் நடைபெறும் போட்டியில், அந்த அணி, பெங்களூரு ஏ.எஸ்.சி. அணியுடன் மோதவுள்ளது.
உள்ளூர் அணி விளையாடியதால், நேற்றைய போட்டியில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |