இவ்வாண்டு நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில், காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், பாடத்தில் - மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கும் பணப்பரிசு வழங்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எம்.கே.முஹம்மத் ஹனீஃபா கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரும் - கூட்டத் தலைவருமான ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்,ஷேக் முஹம்மத், கட்சியின் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிக்கூடத்தின் கட்டிடக் குழு செயலாளர் எச்.ஷம்சுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அவர்களைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மே 26 அன்று பொதுக்கூட்டம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 26.05.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவதென்றும், அக்கூட்டத்தில், கேரள அரசின் இரும்புத்தாது தொழிற்கழகம் மற்றும் மலபார் கல்லூரிகள் குழுமத்தின் தலைவருமான கே.எஸ்.ஹம்ஸா, கேரள அரசின் கேல்டெக் வாரிய தலைவர் பீமாபள்ளி ரஷீத் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கச் செய்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - ப்ளஸ் 2 தேர்வில் நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்றோருக்கு பணப்பரிசுகள்:
நடைபெற்று முடிந்துள்ள ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர் மற்றும் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கும், 26.05.2013 அன்று கட்சியால் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தின்போது பணப்பரிசுகளை வழங்குவதென்றும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்ய, கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வசம் பொறுப்பளித்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி நிரல்:
26.05.2013 அன்று கட்சியின் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அன்று காலை 11.00 மணியளவில், கட்சியின் நகர மாணவரணி சார்பில் கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்துவதெனவும், அன்று மாலை 05.00 மணியளவில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் கேரள மாநில சிறப்பு விருந்தினர்களையும், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களையும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளச் செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - சாலைப் பணிகள் தாமதத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு:
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் காயல்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய தார் சாலைப்பணிகள் தாமதப்படுவதற்குக் காரணமானவர்களைக் கண்டித்து, மேற்படி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில் முழு ஆதரவளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, தைக்கா உமர் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் நகர கிளை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |