காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 23ஆம் தேதி வியாழக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு எச்.ஏ.எல். அணியும் மோதின.
ஆட்டம் துவங்கிய முதல் 25 நிமிடங்களில், ஈரணிகளும் விறுவிறுப்புடன் மோதி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தனர்.
போட்டி துவங்கிய 04ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் ப்ரகாஷ் ஒரு கோல் அடித்தார். 24ஆவது நிமிடத்தில், கொச்சி அணியின் அன்ஸார் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் சமநிலை பெற்றது.
அதுவரை இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியது போல் தெரிந்தது. ஆனால், அதன் பின்னர் பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து 5 கோல் அடித்ததால், ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.
28ஆவது நிமிடத்தில் அந்த பெங்களூரு அணி வீரர் மணியும், 40ஆவது நிமிடத்தில் இம்மானுவேலும், 48ஆவது நிமிடத்தில் மீண்டும் மணியும், 56ஆவது நிமிடத்தில் கவுதமும், 73ஆவது நிமிடத்தில் கிங்ஸ்லீயும் கோல் அடித்தனர். இதனையடுத்து, பெங்களூரு அணி 6-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் கொச்சி அணி சுதாரித்து ஆடியது. 78ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் கிச்சு, 80ஆவது நிமிடத்தில் மனோஜ் ஆகியோர் தமதணிக்காக தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து கோல் அடித்து அந்த அணி முன்னிலை பெறுவதற்கு நேரம் இடம் தரவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே ஆட்டம் முடிவுற்றது.
இதனையடுத்து, பெங்களூரு அணி 6-3 என்ற கோல் கணக்கில் கொச்சி அணியை வென்று, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
நேற்றைய போட்டியில், குற்றாலம் ஃபன் லேண்ட் ரிஸார்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.முஹம்மத் ஃபாரூக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், ஐக்கிய விளையாட்டு சங்க மற்றும் சுற்றுப்போட்டிக் குழுவின் பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆட்டம் நிறைவுற்ற பின்னர், காலிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. குற்றாலம் ஃபன் லேண்ட் ரிஸார்ட் நிறுவனத்தின் அனுசரணையிலான அப்பரிசை, அதன் அதிபரும் - சிறப்பு விருந்தினருமான பி.முஹம்மத் ஃபாரூக் வழங்கினார்.
இன்று மாலை நடைபெறும் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், மதுரை விக்ரம் பொறியியல் கல்லூரி அணியும் மோதுகின்றன.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |