சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக 35 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் மே மாத செயற்குழுக் கூட்டம், 17.05.2013 வெள்ளிக்கிழமை இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர் சோனா முஹம்மத் அபூபக்கர் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார்.
மன்றச் செயல்பாடுகள் நடைபெறும் விதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தால் இரவு நேரங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் அனைத்தும், அக்கூட்டங்களில் பங்கேற்போரின் வசதிகளைக் கருத்திற்கொண்டு, இனி வருங்காலங்களில் 21.15 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட,
ஜனாப் முத்துவாப்பா,
ஜனாப் எம்.எச்.அப்துல் ரஹ்மான்,
ஜனாப் இல்யாஸ்
ஆகியோரைக் குறிப்பிட்டும், அனைவரையும் பொதுவாகவும் அவர் வரவேற்றுப் பேசினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.எஸ்.தவ்ஹீத் சிற்றுரையாற்றினார். சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காக நல்லதொரு களம் அமைத்துத் தந்தமைக்காக, மன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், மன்றத்தின் வெற்றிக்காக முழு ஒத்துழைப்பு நல்கி வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
பின்னர், மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்தும், கடந்த கூட்டம் முதல் நாளது தேதி வரையில் மன்றத்தால் நடத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, மன்றச் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட மதீப்பீட்டுப் படிவங்களின் (Performance Appraisal and Members’ Feedback form) படி தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, செயற்குழுவின் மூலம் முழுமையாக பரிசீலிக்கப்பட்ட பின், அதனடிப்படையில் இனி வருங்காலங்களில் மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தின் தன்மைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் நாளது தேதி வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் வாசிக்க, சில விசாரணைகளுக்குப் பின் கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
தொடர்ந்து பேசிய அவர், மன்றப் பொருளாளர் பொறுப்பிற்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
மன்றத்தின் நிதிப் பரிமாற்றங்களை இன்னும் இலகுவாக்கிடும் பொருட்டு, வங்கியொன்றில் வைப்புக் கணக்கு துவக்கப்பட விரைவில் வேண்டும் என்றும், அவ்வாறு வைப்புக் கணக்கு துவக்கப்படும் வரை, நடப்பு வங்கிக் கணக்கிலேயே நிதிப் பரிமாற்றத்தைத் தொடரலாம் என்றும் கூறினார்.
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் பேசினார். அண்மையில் தாயகம் சென்றிருந்தபோது, ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வுகள் மற்றும் ஏழை - எளிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் தானும் பங்கேற்றதாகக் கூறி, அவை தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஹாஃபிழ்களுக்கு முழு ஊக்கமளித்து வரும் செயல்திட்டமான - ஹாஃபிழ்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைத்துத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மன்ற உறுப்பினர்கள் தாயகம் செல்கையில், மன்றப் பணிகளுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
நிதியொதுக்கீடு:
பின்னர், பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி, காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட - வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் சிறுதொழில் வகைகளுக்காக ரூபாய் 35 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:
மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடப்பு பருவத்திற்கான பரிசீலனைக் குழுவினராக,
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை,
கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்,
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பணி விபரங்களடங்கிய தரவுதளம்:
அடுத்து, மன்ற உறுப்பினர்களின் பணி விபரங்களை உள்ளடக்கிய தரவுதளம் (database) ஒன்றை மன்றத்தின் சார்பில் உருவாக்கி, செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, உறுப்பினர் சோனா அபூபக்கர் ஸித்தீக் விளக்கிப் பேசினார்.
வேலை தேடுவதற்காக சிங்கப்பூருக்கு வரும் காயலர்களுக்கு இந்த தரவுதளம் பெரிதும் துணை புரியும் என்று கூறிய அவர்,
வேலைவாய்ப்பு கருத்தரங்கு:
வரும் 22.06.2013 தேதியன்று, மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கருத்தரங்கில், உறுப்பினர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் தன்மைகள், தமது பணி குறித்த விபரங்கள், அந்நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள், அவற்றைப் பெற்றிடுவதற்கான வழிமுறைகள் குறித்து, ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பாகவும் குறைந்தது ஓர் உறுப்பினர் பேச வேண்டுமெனவும் தெரிவித்தார்.
காலாண்டு செய்தி மடல்:
அடுத்து, மன்றத்தின் ஒவ்வொரு 3 மாத கால நடவடிக்கைகளையும் உள்ளடக்கி, காலாண்டு செய்திமலர் ஒன்றை, தேவையான வரைபடங்களுடன் தயாரிக்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் பேசினார். மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தகுதியானதாக அடையாளங்காணப்பட்ட நிகழ்விடங்களை, கணனி உதவியுடன் அனைவருக்கும் அவர் விளக்கினார்.
புது மணவாழ்வு காணும் மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
அடுத்து, அண்மையில் திருமணம் செய்துகொண்ட மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, சில நாட்களில் திருமணம் செய்யவுள்ள உறுப்பினர்களான ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், ஹஸன் ஸுலைமான் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
07.06.2013 அன்று நடைபெறவுள்ள மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக, துணைக்குழு உறுப்பினர் எம்.எல்.எஸ்.மகுதூம் அப்துல் காதிர் நியமிக்கப்பட்டார்.
சிறப்பழைப்பாளர் அறிவுரை:
பின்னர், மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மெருகேற்றி செய்வது குறித்து, சிறப்பழைப்பாளர் முத்துவாப்பா சில அறிவுரைகளை வழங்கினார்.
கூட்ட நிறைவு:
இவ்வாறாக நடைபெற்ற கூட்டம், விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் இரவு 21.40 மணியளவில் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |