காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 22ஆம் தேதி புதன்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை டான் பாஸ்கோ அணியும், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும் மோதின.
ஆட்டம் துவங்கிய 18ஆவது நிமிடத்தில், எதிரணி வீரரைத் தாக்கியமைக்காக பெங்களூரு அணி வீரர் கார்த்திக், நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆட்டம் முழுவதும் பெங்களூரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதற்பாதியில், 31ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சனத் குமார் என்ற வீரரும், இரண்டாவது பாதியில் 67ஆவது நிமிடத்தில் அதே அணியின் மணி என்ற வீரரும், 77ஆவது நிமிடத்திலும் அதே அணியின் அபிஷேக் என்ற வீரரும் தலா ஒரு கோல் அடித்தனர்.
மறுமுனையில் சென்னை வீரர்கள் தாக்குப்பிடித்து ஆட முனைந்தபோதிலும், பெங்களூருவின் வலிமையில் சுருண்டு போயினர். கடைசி வரை சென்னை அணியினர் கோல் எதுவும் அடிக்காததால், பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
அந்த அணி, மே 23 அன்று (நாளை) நடைபெறவுள்ள 3ஆவது காலிறுதிப் போட்டியில், ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் வென்ற கொச்சி அணியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்றைய போட்டியில், ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழக துணைத்தலைவரும், நகரப் பிரமுகருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், ஐக்கிய விளையாட்டு சங்க செயற்குழு உறுப்பினர் இப்றாஹீம் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். உற்சாகத்திலிருந்த சிறப்பு விருந்தினர், ஒவ்வொரு வீரரையும் ஆற அமர விசாரித்துக் கொண்டிருந்தார். நேரமின்மையை நளினமாக எடுத்துரைத்த சுற்றுப்போட்டிக் குழுவினர். அவசர அவசரமாக வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியை முடித்தது, ரசிக்கும்படியாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர் குறித்து, இடைவேளையில் அறிமுகம் செய்யப்பட்டபோதும், அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், “காயல் நேரு மாமா” என்று அறிவிப்பாளர் வர்ணித்தார். உடனே சிறப்பு விருந்தினர் ரசிகர்களை நோக்கி தனது கையை உயர்த்தி அசைத்துக் காட்ட, ரசிகர்கள் காதைக் கிழிக்கும் ஒலியுடன் கூச்சலிட்டும், விசிலடித்தும், தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |