உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், அதன் புதிய தலைவராக, ஜித்தா காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீனும், புதிய செயற்குழுவினராக பலரும், அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 15.05.2013 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளிக்கெதிரிலுள்ள மன்பஉல் பரக்காத் சங்க தோட்டத்தில் நடைபெற்றது. ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைவர் உரை:
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இக்ராஃவின் நடப்பு தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
அறிமுகவுரை:
அவரைத் தொடர்ந்து, இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கூட்ட அறிமுகவுரையாற்றினார். சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃ கல்விச் சங்கத்தின் இதுநாள் வரையிலான நிர்வாக வரலாறுகள் குறித்து குறிப்பிட்டுப் பேசிய அவர், கூட்ட ஒழுங்குகள் - விதிமுறைகள் குறித்தும் விவரித்தார்.
ஆண்டறிக்கை:
பின்னர், இக்ராஃவின் 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது ஊரிலில்லாததால், அவர் சார்பாக இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது வாசித்தார். (ஆண்டறிக்கை - இன்ஷாஅல்லாஹ் தனிச்செய்தியாக தரப்படும்.)
வரவு-செலவு கணக்கறிக்கை:
அவரைத் தொடர்ந்து, 2012 - 2013ஆம் ஆண்டிற்கான இக்ராஃவின் வரவு - செலவு கணக்கறிக்கையை, அதன் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் சமர்ப்பித்தார்.
கலந்துகொண்டோர் கருத்துப்பதிவு:
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இக்ராஃ நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில், அதன் நடப்பு தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் விளக்கமளித்தனர்.
ஆயுட்கால சந்தா தொகையை இடம் வாங்க பயன்படுத்தலாம்...
துவக்கமாக, கருத்து தெரிவித்த இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இக்ராஃவில் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைவோரின் சந்தா தொகையான ரூபாய் 15 ஆயிரத்தை, இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்குவதற்காக தனிக்கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்கும் வகைக்காகவே அந்தத் தொகை தனியாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், எதிர்பார்க்கப்பட்ட தொகையை அடைய, ரூபாய் 15 ஆயிரம் செலுத்தி, இன்னும் பலர் ஆயுட்கால உறுப்பினர்களாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கல்விப் பணி தவிர வேறெந்த செயல்திட்டத்தையும் கலக்கக் கூடாது...
தொடர்ந்து பேசிய ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இக்ராஃ கல்விச் சங்கம், நகரின் கல்வி வளர்ச்சியை உருவாக்குவதற்கான பணிகளையும், அது தொடர்பான துணைப் பணிகளையும் செய்வதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், வேறெந்த செயல்திட்டங்களையும் இதில் கலந்து விடாமல் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம் என்றும் கூறினார்.
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அண்மையில் அமைக்கப்பட்ட மத்ரஸா கல்வி மேம்பாட்டுக் குழுவில் தமிழ்நாட்டின் ஒரே உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மத்ரஸாக்களில் ஆங்கிலக் கல்வி உள்ளிட்ட உலகக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டால், அதற்கான ஆசிரியர் ஊதியமாக மாதம் 12 ஆயிரம் ரூபாயும், நூலகம் அமைக்க ரூபாய் 50 ஆயிரமும் என இவ்வாறாக பல தொகைகள் வழங்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் இதை தவறாமல் பயன்படுத்திக் கொண்டிருக்க, தமிழ்நாட்டிலிருந்து யாரும் இதிலிருந்து சிறிதளவு கூட பயன் பெறாததையறிந்து மிகவும் வருந்தியதாகவும் கூறினார்.
அரசு உதவித் திட்டங்களை மாணவர்கள் பெறச் செய்ய தனி செயல்திட்டம்:
தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் தான் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற வரிசையில், சிங்கப்பூருக்குச் சென்று, அங்குள்ள காயல் நல மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், கல்விக்காக இந்திய அரசு அறிவித்துள்ள அனைத்து உதவித் திட்டங்கள் குறித்த விபரங்களை சேகரித்து, காயல்பட்டினம் நகரின் மாணவ-மாணவியருக்கு அவ்வுதவித் தொகைகளைக் கிடைக்கச் செய்ய, தனியொரு அலுவலரை அமைத்தால், அவருக்கான மாத ஊதியத்திற்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறியதோடு, இந்த வாய்ப்பை இக்ராஃ சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மத்ரஸாக்களுக்கு அரசு சலுகைகளைப் பெற்றுத் தரல்...
இக்ராஃ கல்விச் சங்கம், மாணவர் கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் அமைப்பு என்ற அடிப்படையில், காயல்பட்டினத்திலுள்ள மத்ரஸாக்களில் இதுபோன்ற உலகக் கல்விப் பிரிவுகளைப் பயிற்றுவிக்க ஒருங்கிணைப்புப் பணிகளை செய்துகொடுக்க தீர்மானித்தால், அவ்விஷயத்தில் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தர தான் ஆயத்தமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹாஜி எம்.எம்.அஹமது ஹுஸைன், “இக்ராஃ இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாமே?” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, இன்ஷா அல்லாஹ்! அதற்கான முயற்சிகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை குறித்து குறுக்கு விசாரணை:
அடுத்து பேசிய தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜெ.செய்யித் ஹஸன், பொருளாளர் சமர்ப்பித்த வரவு - செலவு கணக்கறிக்கையிலிருந்து சில விபரங்களைக் கேட்க , பொருளாளர் அவற்றுக்கு விளக்கமளித்தார்.
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் குறித்து விளக்கம்:
அடுத்து, ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் பேசுகையில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து இக்ராஃ கல்விச் சங்கம் ஆண்டுதோறும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை நடத்தி வருவதைக் குறிப்பிட்டு, இந்நிகழ்ச்சிக்கு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் பங்களிப்பு குறித்து விளக்கம் கேட்டார்.
அதற்கு விளக்கமளித்த இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவரை காயல்பட்டினம் நகருக்கு அழைத்து வந்து, இங்குள்ள மாணவ - மாணவியருக்கு ஊக்கமளித்திடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதென்பது, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பினரின் எண்ணத்தில் உதித்தது என்றும், அக்காலகட்டத்தில்தான் இக்ராஃ கல்விச் சங்கமும் துவங்கப்பட்டதால், இக்ராஃவுடன் இணைந்தே இந்நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, இக்ராஃ நிர்வாகத்தை தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பினர் முறைப்படி தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்திட இக்ராஃவின் அப்போதைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சிக்கு, மாநிலத்தின் முதன்மாணவரை அவரது பெற்றோருடன், ரயிலில் – குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பில் அழைத்து வரல், அவர்கள் தங்கிட லாட்ஜ் ஏற்பாடு, உணவு ஏற்பாடு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் பிரமுகரை அழைத்து வரவும், தங்க வைத்து உணவளிக்கவும் இதே போன்ற ஏற்பாடுகள் ஆகிய – வெளியூரிலிருந்து செய்ய வேண்டிய அத்தனை ஏற்பாடுகளுக்கும், அவற்றுக்கான செலவினங்களுக்கும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பே முழுப் பொறுப்பெடுத்து, இது காலம் வரை செய்து வருவதாகவும்,
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் பரிசளிப்பு நிகழ்வின்போது, நகரின் சிறந்த பள்ளிகளுக்கான பணப்பரிசு மற்றும் கேடயங்கள், ப்ளஸ் 2 தேர்வில் 1100க்கு மேலும், 1000க்கு மேலும் மதிப்பெண்களைப் பெற்ற அனைத்துப் பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுக்கும் அவர்களே பொறுப்பேற்று செலவு செய்து வருவதாகவும் கூறினார்.
அறிக்கை நகல்களை முற்கூட்டியே அனைவருக்கும் அளித்தல்:
அடுத்து, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் பேசினார். இதுபோன்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவு கணக்கறிக்கையை , முற்கூட்டியே ஃபோட்டோ காப்பி நகல் எடுத்து, கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு அளித்தால், அவர்கள் பல சந்தேகங்களுக்கு அவற்றிலிருந்தே விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள இயலும் என்று கூறினார்.
இந்த ஆலோசனை ஏற்கப்படுவதாகவும், இனி வருங்காலங்களில் கூட்டப்படும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் போது வழங்கப்படும் நிகழ்ச்சி நிரல் குறித்த விபரங்களுடன் வரவு - செலவு கணக்கறிக்கையின் ஃபோட்டோ காப்பி நகலும் வழங்கிட ஆவன செய்யப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு தகவலகம்:
அடுத்து பேசிய ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., நகரில் படித்த இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்திட இக்ராஃ மூலம் வழிவகை செய்பய்பட வேண்டுமெனவும், படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக நூலகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் கூறினார்.
இவையனைத்தும், இக்ராஃவின் செயல்திட்டங்களில் உள்ளவையே என்றும், தற்போதைக்கு சிறிய அளவில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும், எனினும் சொந்த இடத்தில் இக்ராஃ செயல்படும்போதுதான் இவற்றை நிறைவாகச் செய்திட இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான உதவித்தொகை முறைகேடுகளைக் கண்டறிதல்:
அடுத்து, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.எல்.ஆதம் பேசினார். பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி. போன்ற பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக பல மன்றங்கள் உதவித்தொகைகளை மாணவ-மாணவியருக்கு வழங்கினால், ஒரே மாணவர் இருவேறு அமைப்புகளிடமிருந்து தவறாக உதவித்தொகை பெறுவதைக் கண்டறிய இக்ராஃவிடம் என்ன செயல்திட்டம் உள்ளது என்று கேட்டார்.
அதற்கு விளக்கமளித்த இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, மருத்துவம் - பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக மன்றங்கள் வழங்கும் உதவித்தொகை குறித்த பயனாளிகளின் அனைத்து விபரங்களும், அந்தந்த மன்றங்களின் சார்பில் இக்ராஃவுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும், பெறப்படும் விபரங்களின் அடிப்படையில் முறைகேடுகளைக் கண்டறிவது எளிது என்றும், ஏற்கனவே இவ்வாறு தவறாக கூடுதல் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தொகையை திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கல்வி ஒளிபரப்பை அரையாண்டுத் தேர்வுக்கு முன்னர் நடத்தல்:
அடுத்து பேசிய கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், இக்ராஃவால் ஆண்டுதோறும் 10ஆம் - 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்காக ஒளிபரப்பப்படும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை, ஆண்டிறுதியில் நடத்துவதைத் தவிர்த்து, அரையாண்டுத் தேர்வுக்கு முன்பாக நடத்தினால் என்ன என்று கேட்டார்.
அதன் நடைமுறை சாத்தியங்கள் குறித்து, அத்துறை சார்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்து விழிப்புணர்வூட்டல்:
தொடர்ந்து பேசிய அவர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் விஷயத்தில் நகர மாணவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பாக ஏற்கனவே பல ஆண்டுகளாக பல மன்றங்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளை அடிப்படையாக வைத்து, மாணவ-மாணவியரை ஆர்வமூட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இக்ராஃ செய்துள்ளதாகவும், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் - இக்ராஃவின் ஒருங்கிணைப்புடன் இதற்கென சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதுகுறித்து அனைத்து மாணவ-மாணவியருக்கும் முறைப்படி ஆர்வமூட்டப்பட்டும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது என்றும், மாணவர்களுக்காக பொது நல அமைப்புகள் ஆர்வம் காட்டும் அதே வேளையில், மாணவர்களும் தமக்காக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டால் மட்டுமே இது விஷயத்தில் அவர்களுக்கு முழு விழிப்புணர்வூட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவுக்கு சொந்த இடம்:
அடுத்து பேசிய காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ செயற்குழு உறுப்பினருமான எஸ்.அப்துல் வாஹித், இக்ராஃவுக்கு இடம் கேட்டு அப்பா பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் கூடவுள்ள ஜமாஅத் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து, முறைப்படி தகவல் தரப்படும் என்றும் கூறினார்.
அரசு சலுகைத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வூட்டல்:
அடுத்து, ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் வி.எம்.ஏ.மக்தூம் அமீன் பேசினார். பொதுவாகவும், சிறுபான்மை மாணவர்களுக்குத் தனியாகவும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் இக்காலகட்டத்திலும், அதுகுறித்த சிறிய அளவு விழிப்புணர்வு கூட மக்களிடம் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றும், ஏற்கனவே இது குறித்து கவலையெடுத்து செயலாற்றி வரும் உலக காயல் நல மன்றங்கள் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியவை, இன்னும் கூடுதலாக இதுகுறித்து சிந்தித்து, நல்ல செயல்திட்டமொன்றை வகுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசு வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல்:
அடுத்து பேசிய எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், அரசு வேலைவாய்ப்புகளைப் பெற்றிட தகுதியுள்ளோருக்கு வழிகாட்டுவதற்காக ஆறுமுகநேரியில் அமைப்பு ஒன்று உள்ளதாகவும், அதன் கிளை காயல்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி, தகுதியுள்ள காயலர்கள் அரசு வேலையைப் பெற்றிட தேவையான ஒத்துழைப்புகளை வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
அரசு உதவித்தொகைகளைப் பெற மாணவர்களுகு்கு கூடுதல் ஊக்கமளித்தல்:
அடுத்து பேசிய துபை காயல் நல மன்ற கல்விக் குழு உறுப்பினர் ஏ.முத்து ஃபரீத், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகளைப் பெற்றிடுவதில், அதற்குத் தேவையான ஆவணங்களில் அதிகாரிகளிடம் கைச்சான்று பெற சில இடங்களுக்கு அலைந்து திரிவதற்கு மாய்ச்சல் பட்டு, நகர மாணவ-மாணவியர் இது விஷயத்தில் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை என்றும், தான் பட்டப்படிப்பு படித்திட தேவையான செலவினங்களில் பெரும்பகுதியை, சிரமம் பாராமல் அலைந்து திரிந்து விண்ணப்பித்து, அரசின் உதவித்தொகையைப் பெற்றே ஈடுகட்டியதாகவும் கூறினார்.
மேலும் பொறியியல் கல்வி என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் இன்று மிகவும் மலிவாகிவிட்ட சூழ்நிலை உள்ளதாகவும், ஆனால் ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்கல்வி முடித்தோருக்கு எல்லா நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளதாகவும், பொறியியல் போன்ற படிப்புகளை முடித்தவர்களை விட இவர்களால் தற்காலத்தில் கூடுதலாக ஊதியம் பெற்றிடவும் இயலும் என்றும், எனவே நமது மாணவர்களுக்கு இது குறித்த வழிகாட்டுதலை ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
உயிரியல் துறை படிப்புகளின்பால் ஆர்வமூட்டல்:
அடுத்து பேசிய எம்.என்.ஸிராஜுத்தீன் நிஜார், உயிரியல் துறை பட்டப்படிப்புகளில் காயல்பட்டினம் மாணவ-மாணவியருக்கு ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும், இதனைக் கற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
சொந்த இடத்திற்காக உள்ள தொகையை வணிகத்தில் முதலீடு செய்தல்:
நிறைவாகப் பேசிய தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ, இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்குவதற்கான தொகையை வங்கியில் போட்டு வைக்காமல், ரியல் எஸ்டேட் நில வணிகத்தில் முதலீடு செய்தால் அத்தொகை பன்மடங்கு பெருகும் என்று கூறினார்.
அரசின் சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் இக்ராஃ பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நிதியை இதுபோன்ற வணிகங்களில் முதலீடு செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்றும், சட்டப்படி இயலாத ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறாக, கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்துக்களும், அவற்றுக்கான விளக்கங்களும் அமைந்திருந்தன.
புதிய நிர்வாகிகள் - செயற்குழுவினர் தேர்வு:
பின்னர், இக்ராஃவின் 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான புதிய பருவத்திற்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி குளம் எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன்
(தலைவர், ஜித்தா காயல் நற்பணி மன்றம்)
துணைத் தலைவர்கள்:
ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன்
(தலைவர், ரியாத் காயல் நற்பணி மன்றம்)
எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்
(தலைவர், கத்தர் காயல் நல மன்றம்)
எம்.அஹமது ஃபுஆத்
(தலைவர், சிங்கப்பூர் காயல் நல மன்றம்)
ஹாஜி டாக்டர் ஏ. முஹம்மது இத்ரீஸ்
(தலைவர், தம்மாம் காயல் நற்பணி மன்றம்)
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(தலைவர், தாய்லாந்து காயல் நல மன்றம்)
செயலாளர்:
கே.ஜெ.ஷாஹுல் ஹமீது
துணைச் செயலாளர்கள்:
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
பொருளாளர்:
கே.எம்.டி.சுலைமான்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர்
(02) ஹாஜி எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதர் (சின்ன லெப்பை)
(03) ஹாஜி வாவு எஸ். அப்துல் கஃப்பார்
(04) ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ். ஸதக் தம்பி
(05) ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால்
(06) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர்
(07) ஹாஜி ஏ.கே.கலீல்
(08) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
(09) ஹாஜி எம்.எஸ்.முஹம்மது அப்துல் காதர்
(10) மாஸ்டர் எம்.ஏ.புஹாரி
(11) ஹாஜி ஏ.ஆர்.தாஹா
(12) ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப்
(13) ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்
(14) ஹாஜி ஏ.எஸ்.அஷ்ரஃப்
(15) எஸ்.அப்துல் வாஹித்
(16) ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸிம்
(17) எஸ்.எம்.அஹமது ஸுலைமான்
(18) அல்ஹாபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்
(19) எஸ்.எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது
(20) ஹாஜி எஸ்.எஸ்..எம்.ஸதக்கத்துல்லாஹ்
(21) ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
(22) எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ்
(23) ஹாஜி எம்.ஏ.எம்.முஹிதீன் அப்துல் காதர்
(24) ஜே.மஹ்மூதுல் ஹஸன்
(25) ஹாஜி எம்.எம். ஷாஹுல் ஹமீது
இவ்வாறாக, நிர்வாகிகளும் - செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர், இக்ராஃவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீனிடம், நடப்பு தலைவரான - தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இக்ராஃ கோப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.
தீர்மானங்கள்:
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - ஆண்டறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ செயலாளர் சார்பாக நிர்வாகியால் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012 - 2013ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 02 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளரால் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012 - 2013ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 03 - விடைபெறும் தலைவருக்கு நன்றி:
2012-2013ஆம் ஆண்டின் இக்ராஃ தலைவராக இருந்து, தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாகச் செய்த தாய்லாந்து காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கும், அவர்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த தாய்லாந்து காயல் நற்பணி மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 04 - புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்:
இக்ராஃவில் புதிதாக உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ள 22 பேரின் விண்ணப்பங்களுக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 05 - இக்ராஃ அலுவலக இடமாற்றம்:
இக்ராஃவின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, 2013 - மே 01ஆம் தேதி முதல், 5/1B, கீழ நெய்னா தெரு என்ற முகவரியில் இயங்கவும், அதற்காக முன்பணமாக (டெபாசிட்) ரூபாய் 10 ஆயிரமும், மாத வாடகையாக ரூபாய் 3 ஆயிரமும் வழங்கிடவும் இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 06 - நிதியளிப்போருக்கு நன்றி:
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு நிதி வழங்கி வரும் உலக காயல் நல மன்றங்களுக்கும், இக்ராஃ அபிமானிகளுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 07 - சொந்த இடம் வாங்க சிறப்புக் குழு:
இக்ராஃவுக்கு சொந்த இடம் / கட்டிடம் வாங்குவது குறித்த பணிகளைச் செய்திட,
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்
ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால்
ஹாஜி எஸ்.ஏ.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன்
ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி
ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
ஹாஜி குளம் எம்.ஏ.அஹமது முஹியித்தீன்
ஜனாப் ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
ஜனாப் கே.ஜெ. ஷாஹுல் ஹமீது
ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது. இக்ராஃ நிர்வாகிகளுடன் இணைந்து இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையளிக்கவும், அதுகுறித்து இக்ராஃவின் செயற்குழுவில் இறுதி முடிவெடுக்கவும் இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 08 - மத்ரஸாக்களுக்கு அரசு சலுகைகளைப் பெற்றுத் தர ஒருங்கிணைப்புப் பணிகள்:
மத்ரஸாக்களில் ஆங்கிலம் உள்ளிட்டவற்றைப் பயிற்றுவிப்பதற்காக அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றளித்திட தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திடவும், கல்விக்காக அரசு வழங்கும் உதவித்தொகைகளைப் பெற்றிட மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தனி அலுவலரை நியமித்து, அவருக்கு ஊதியம் அளிக்க சிங்கப்பூர் காயல் நல மன்றம் விரும்பிய படி அதன் முழு அனுசரணையைப் பெற்றிடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 09 - வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்:
அரசு அதிகாரிகளை காயல்பட்டினம் நகருக்கு அழைத்து வந்து, வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 10 - அரசு உதவித்தொகைகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு:
அரசு உதவித்தொகையைப் பெற்றிட பல்வேறு அதிகாரிகளிடம் ஆவணங்களில் கைச்சான்று பெறுவதற்காக மாணவர்கள் பெரும் அலைச்சலை சந்திப்பதைத் தவிர்த்திட, அத்துறை சார்ந்த அதிகாரிகளை காயல்பட்டினத்திற்கே வரவழைத்து, குறிப்பிட்ட தேதிகளில் முகாம் நடத்தி, நகர மாணவ-மாணவியர் கல்வி உதவித்தொகை பெற்றிட வழிவகை செய்துகொடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 11 - “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சி ஏற்பாடு:
வழமை போல இவ்வாண்டும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கூட்ட நிறைவு:
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூறினார்.
துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், இக்ராஃவின் பொதுககுழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விருந்துபசரிப்பு:
கூட்டத்தைத் தொடர்ந்து, லுஹர் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. பின்னர், இக்ராஃ புதிய தலைவரும், ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் மற்றும் இக்ராஃ முன்னாள் தலைவர் ஹாஜி வாவு எம்.எம். ஷம்சுதீன் ஆகியோரின் அனுசரணையில், அனைவருக்கும் நிகழ்விடத்திலேயே மதிய உணவாக காயல்பட்டினம் களறி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கூட்டம் மற்றும் உணவு ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தலைமையில், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, கே.எம்.ஏ.முஹம்மது முஹ்யித்தீன்,அலுவலக உதவியாளர் எம்.ஏ.கே.காதிர் சுலைமான், மன்பஉல் பரக்காத் சங்கத்தைச் சேர்ந்த பி.எம்.ஏ.முஹ்யித்தீன் தம்பி மற்றும் அங்கத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம் |