காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக, வெப்ப வானிலை மிகுந்து காணப்பட்டது. கத்திரி வெயிலின் தாக்கத்தால், காற்றடித்தபோதிலும் அதில் ஈரப்பதமின்றி வரண்ட நிலையில் வீசியது.
வெயிலின் கொடுமை தாங்காமல், நகர பொதுமக்கள் - தயிர், மோர், குளிர்பானம், பழங்கள், பதனீர், நுங்கு விற்கும் கடைகளின்பால் மொய்ப்பது வழமையாகிப் போனது.
திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்திலுள்ள காயலர்களுக்குச் சொந்தமான தோட்டங்கள், தோப்புகள் அனைத்தும் மே மாத இறுதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது இப்படியிருக்க, இன்று (மே 21) மதியம் ஒரு மணியிலிருந்து, பெரும்புழுதியுடன் பலத்த காற்று வீசுகிறது. சாலைகளில் மணல் பறந்தோட, அவற்றின் சில பகுதிகளில் மட்டும் துப்புரவுப் பணியாளர்கள் பராமரிப்பு செய்தது போல தெளிவுற காணப்படுகிறது.
மரங்கள் அங்கும் இங்குமாக சிகை விரித்து அசைந்தாடுகின்றன.
அவற்றிலிருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து, சருகுகளாகப் பறக்கின்றன. வீசும் காற்றில் ஈரப்பதம் காணப்படுகிறது.
வரண்ட நிலையில் வெப்பமாக நிலவிய வானிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இம்மாற்றம், நகர பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டினம்.காம்
|