காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், விசாகப்பட்டினம் கோஸ்டல் ஆந்திரா அணியும் மோதின.
ஆட்டம் அடிதடியுடன் துவங்கியது. ஈரணி வீரர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதையடுத்து, ஆட்டம் துவங்கிய 04ஆவது நிமிடத்தில், கொச்சி அணியின் மன்ச், விசாகப்பட்டினம் அணியின் ஃபெரோஸ் ஆகிய வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, களத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆட்டத்தின் முதற்பாதியில் - 34ஆவது நிமிடத்தில், எதிரணி வீரர் கோல் காப்பு எல்லைக்குள் தவறிழைத்த காரணத்தால், கொச்சி அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த அணி வீரர் பரதன், ஒரு கோல் அடித்து, தனதணியை முன்னிலை பெறச் செய்தார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், எப்படியேனும் கோல் அடித்து விட வேண்டும் என்ற வேட்கையில் விசாகப்பட்டினம் அணியும், வெற்றியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் கொச்சி அணியும் முனைப்புடன் விளையாடின. பல நேரங்களில், விசாகப்பட்டினம் அணிக்குக் கிடைத்த கோல் வாய்ப்புகள் எல்லாம் கை நழுவிப்போன நிலையில், ஆட்ட நிறைவுற சில மணித்துளிகள் எஞ்சியிருந்தபோது, 84ஆவது நிமிடத்தில், கொச்சி அணி வீரர் நியாஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்த சில மணித்துளிகளில் ஆட்டம் நிறைவுற்றது. இதன்மூலம், கொச்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் விசாகப்பட்டினம் அணியை வென்றது.
இந்த வெற்றியையடுத்து. கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி, இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள 3ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
நாளை (மே 22) மாலையில் நடைபெறும் போட்டியில், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும், சென்னை டான் பாஸ்கோ அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்றைய போட்டியில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆட்டத்தின் இடைவேளையின்போது அவருக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், கலாமீ செய்யித் உமர் ஃபாரூக் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 20:59 / 22.05.2013] |