சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா இம்மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்வோருக்காக, காயல்பட்டினம் அலியார் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் இயங்கி வரும் நிறுவனம், சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் தமது கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நமது தஃவா சென்டர் சார்பில் ஆண்டுதோறும் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய கொள்கை விளக்கம், நற்பண்புகள், திருமறை குர்ஆன் - துஆக்கள் மனனம் என பல பாடத்திட்டங்களை உள்ளடக்கி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் பயிற்சி வகுப்புகள், இம்மாதம் 01ஆம் தேதி துவங்கி, 22ஆம் தேதி - இன்றுடன் நிறைவுறுகிறது.
நடப்பாண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவுறுவதையொட்டி, “உள்ளம் அமைதி பெற” என்ற தலைப்பில், கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா, இம்மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் அலியார் தெருவில் அமைந்துள்ள நமது தஃவா சென்டர் கட்டிடத்தின் முன்பகுதியில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ளது.
அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, பயிற்சி வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 05.00 மணிக்கு, இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்ட மாணவர்கள் பங்கேற்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
துவக்கமாக இஸ்லாமைத் தழுவிய மாணவர்களின் தன்னனுபவ உரைகள் இடம்பெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, “ஷைத்தானின் ஊசலாட்டம்” என்ற தலைப்பில், மாணவர்கள் பங்கேற்கும் Mono Acting நிகழ்ச்சியும், மஃரிப் தொழுகைக்குப் பின், “நாங்க சொல்லல” என்ற தலைப்பில், முற்றிலும் வேறுபட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி - அசைபட காட்சிகளுடனும் அரங்கேறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ள - சென்னையைச் சேர்ந்த திரைப்பட முன்னாள் கதாசிரியரும், இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டவருமான எட்வர்ட் என்ற தாரிக் இஸ்மாஈல் சிறப்புரையாற்றுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்த வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், http://cesh.in/livetv.html, http://www.ustream.tv/channel/dawahcentre ஆகிய இணையதளங்களில் நேரலை செய்யப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, +91 98421 77609, +91 91500 50554, +91 91500 50556, +91 91504 48312 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |