தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் சராசரி மழை பெய்யும் என்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால், இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் உள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கும். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவகாலத்தில் பெய்யும் மழையின் மூலம்தான் அணைகளுக்கும் அதிக அளவில் நீர்வரத்து இருக்கும். ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், தென் இந்திய கடற்பகுதியின் வெப்பநிலை, பருவமாற்றங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு ஆஸ்திரேலியன் ரெயின்மேன் என்ற பருவநிலையை கணக்கிடும் நவீன சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்து மழை அளவு விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வழக்கமாக பெய்யும் மழையைவிட அதிகமாக மழை பெய்யும் என்றும், மொத்தம் 110 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சராசரி மற்றும் அதற்கு மேலும் 91 சதவீதம் முதல் 110 சதவீதம்வரை மழை பெய்யும் மாவட்டங்கள்:- அரியலூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்கள்.
சராசரி மழை அளவான 81 சதவீதம் முதல் 90 சதவீதம்வரை மழை பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்கள்:- கோவை, கன்னியாகுமரி, சென்னை, தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
சராசரியைவிட 80 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்கள்:- ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, திருப்பூர்.
மலை மாவட்டங்களான நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சராசரி மழை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் சராசரியைவிட குறைவான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை கோவை வேளாண்மை பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தகவல்:
www.tutyonline.net
|