காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் இரு அணிகளும் உற்சாகத்துடன் விளையாடி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்.
55ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் ப்ரிட்டோ என்ற வீரர் முதல் கோலை அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கினார்.
பின்னர், 72, 74ஆவது நிமிடங்களில் அதே அணி வீரர் ரீகன் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து, அணியின் கோல் கணக்கை 3 ஆக்கினார்.
அதுவரை உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருந்த கோழிக்கோடு அணியினர், ஆட்ட நிறைவு நேரத்தில் எதிரணி 3 கோல்கள் அடித்த நிலையிலிருந்தமையால், சோர்வுறத் துவங்கினர். கோழிக்கோடு அணி வெற்றிபெறும் என எதிர்பார்த்த ரசிகர்கள் பலரும் உற்சாகமிழந்து காணப்பட்டனர். பலர் மைதானத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், அடுத்த சில நிமிடங்களில், கோழிக்கோடு அணி வீரர் தவறான ஆட்டம் ஆடியமைக்காக நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார்.
இவ்வாறிருக்க, திடீரென அங்கு பாய்ந்து வந்த சென்னை வீரர் ராஜதுரை, கோழிக்கோடு வீரர் அஷ்ரஃபை தாக்கத் துவங்கினார். அதனையடுத்து, ராஜதுரைக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து, போட்டியிலிருந்து வெளியேற்றினார்.
அந்நேரத்தில், சென்னை அணியின் கோல் காப்பாளர் ரெக்ஸ் கேப்ரில் தனது கோல் காப்பு எல்லையிலிருந்து மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஓடிவந்து, சிவப்பு அட்டை காண்பித்த நடுவரைத் தாக்க முற்பட்டார். நடுவர்கள் அதனைப் பொறுமையுடன் சாமர்த்தியமாகக் கையாண்டனர்.
3-0 என்ற கோல் கணக்கில், வெற்றிவாய்ப்பு பிரகாரசமாக இருந்த நிலையில், சென்னை அணியினர் இவ்வாறு நடந்துகொண்டது, பார்வையாளர்களைப் பெரிதும் முகம் சுளிக்கச் செய்தது.
இந்நிகழ்வுகளால், சிறிது நேரம் மைதானம் பரபரப்புடன் காணப்பட்டது. ஆட்டத்தின் நிறைவில், சென்னை வருமான வரித்துறை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் நான்காவது காலிறுதிப்போட்டியில், ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற்ற பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியுடன் விளையாடவுள்ளது.
நேற்றைய போட்டியில், சிறப்பு விருந்தினர்களாக - கேரள அரசின் இரும்பு உற்பத்திக் கழக தலைவரும், மலபார் கல்லூரிகள் குழுமத் தலைவருமான கே.எஸ்.ஹம்ஸா, கேரள அரசின் கெல்டெக் வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட தலைவருமான பீமாபள்ளி ரஷீத், அவர்களுடன் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - காயல்பட்டினத்சை் சேர்ந்தவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டது.
நேற்றைய போட்டியில், நகரின் பல பகுதிளைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |