காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், சென்னை மாநகர காவல்துறை (சென்னை சிட்டி பொலிஸ்) அணியும், நெல்ழைல மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டம் முழுவதும் ஈரணிகளும் தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தியதால், தாக்குதல் ஆட்டத்தைக் காணவே இயலாமற்போயிற்று. ஆட்டம் முடிவடையும் வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர், சமனுடைப்பு முறை மூலம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில், ஈரணிகளும் தலா 4 கோல்கள் அடித்து சமநிலை பெற்றது. பின்னர், சட்டன் டெத் முறை கையாளப்பட்டது. அதிலும் ஈரணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. மீண்டும் அளிக்கப்பட்ட வாய்ப்பில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி மட்டும் ஒரு கோல் அடித்ததால், 6-5 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி, வரும் 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் - இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதவுள்ளது.
இன்று மாலையில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியும் மோதவுள்ளன.
நேற்றைய போட்டியில், நெல்லை ஆர்யாஸ் ஹோட்டல் அதிபரும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக துணைத்தலைவருமான எம்.ஜெயப்ரகாஷ் நாராயணன் கலந்துகொண்டார். அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர், அவருக்கு சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
நேற்றைய போட்டியில், நகரின் பல பகுதிளைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
நேற்றைய போட்டியை காயல்பட்டணம்.காம் உள்ளிட்ட இணையதளங்களில் வீடியோ நேரலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, சென்னை மாநகர காவல்துறை (சென்னை சிட்டி பொலிஸ்) அணிக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் அனுசரணையிலான அப்பரிசை, அதன் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் சார்பாக, அதன் முன்னாள் துணைத்தலைவரும், நடப்பு செயற்குழு உறுப்பினருமான எம்.ஏ.சி.செய்யித் இப்றாஹீம், சென்னை அணியினரிடம் வழங்கினார்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
ஒளிநேரலை ஏற்பாடு:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக் (கணனி தொழில்நுட்பம்)
யூனுஸ் முஸ்தஃபா (கணனி தொழில்நுட்பம்)
M.T.ஹபீப் முஹம்மத் (கேமரா)
பாலப்பா (நேர்முக வர்ணனை)
மே 27ஆம் தேதியன்று நடைபெற்ற ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |