காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, இன்று 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 29ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பெங்களூரு எச்.ஏ.எல். அணியும், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியும் மோதின.
முதற்பாதியில் ஈரணிகளும் மந்த நிலையிலேயே ஆடியதாலும், ஈரணிகளும் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்ததாலும், எந்த அணியும் கோல் அடிக்க இயலவில்லை.
இவ்வாறிருக்க, இரண்டாவது பாதியில் 51ஆவது நிமிடத்தில், பெங்களூரு எச்.ஏ.எல். அணி வீரர் சனத் குமார் மாற்றப்பட்டு, அவருக்குப் பகரமாக, ராஜு என்ற வீரர் களமிறக்கப்பட்டார். அவர் இறங்கிய இரண்டாவது நிமிடத்தில் - அதாவது, ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில், கோல் காப்பு எல்லைக்கருகில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட வீரர் ராஜு அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
மறுமுனையில், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணி கோல் எதுவும் அடிக்காததால், ஆட்டத்தின் நிறைவில், பெங்களூரு எச்.ஏ.எல். அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி, இன்று மாலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில், ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியுடன் மோதவுள்ளது.
நேற்றைய போட்டியில், நகரின் பல பகுதிளைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
நேற்றைய போட்டியை காயல்பட்டணம்.காம் உள்ளிட்ட இணையதளங்களில் வீடியோ நேரலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டி நிறைவுற்ற பின்னர் வழங்கப்படவுள்ள “மவ்லான அபுல்கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பை” மற்றும் இதர கோப்பைகளும், விருதுகளும், நேற்றைய போட்டியின்போது பொதுமக்கள் பார்வைக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணிக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் அப்பரிசை, பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியினரிடம் வழங்கினார்.
இன்று, இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு எச்.ஏ.எல்.அணியும் மோதுகின்றன.
அதனைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றவுள்ளார்.
இறுதிப்போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பரிசளிப்பு விழா அனைத்தும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேரலை செய்யப்படவுள்ளது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
ஒளிநேரலை ஏற்பாடு:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக் (கணனி தொழில்நுட்பம்)
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ (கணனி தொழில்நுட்பம்)
யூனுஸ் முஸ்தஃபா (கணனி தொழில்நுட்பம்)
M.T.ஹபீப் முஹம்மத் (கேமரா)
S.M.J.ஜெய்னுல் ஆப்தீன் (கேமரா)
A.K.முஹம்மத் இம்ரான் (கேமரா)
A.S.அஷ்ரஃப் (நேர்முக வர்ணனை)
மே 28ஆம் தேதியன்று நடைபெற்ற ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |