காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மைதானத்தின் கிழக்குப் பகுதி சுற்றுச்சுவரையொட்டிய வெற்றிடத்தில் நேற்று தீ எரிந்தது.
பெருமளவில் தீ எரிந்த காரணத்தால், திருச்செந்தூரிலுள்ள தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனம் காயல்பட்டினத்திற்குள் நுழைந்தது. காயல்பட்டினம் தீவுத்தெருவில், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியருகில் திருமண நிகழ்ச்சிக்காக சாலையில் பந்தல் போடப்பட்டிருந்தமையால், சிறிது நேரம் தாமதமானது.
அதனைத் தொடர்ந்து, கீழ நெய்னார் தெருவிலிருந்து - கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்குச் செல்லும் சாலையில், வேப்பமரக் கிளையொன்று சாலையின் குறுக்கே வளர்ந்துள்ளதால், அச்சாலை வழியாக தீயணைப்பு வாகனம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
நிகழ்விடம் செல்வதற்கு வேறு வழிகள் எதுவுமில்லாத நிலையில், தீயணைப்பு வாகனத்தை முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்திய தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணிக்கான சாதனங்களைக் கையிலெடுத்துக்கொண்டு, கால்நடையாகச் சென்று, தீ எரிந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் சீரமைப்புப் பணிகளைச் செய்தனர்.
இந்நிகழ்வின்போது, அப்பகுதிக்கான காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி உடனிருந்தார். |