காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 27ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில், சென்னை வருமான வரித்துறை அணியும், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் இரு அணிகளும் உற்சாகத்துடன் விளையாடி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர். ஆனால், முதற்பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், 52ஆவது நிமிடத்தில், பெங்களூரு அணி வீரர் ஜோதி சிங் அற்புதமாக ஒரு கோல் அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கினார். அடுத்த இரண்டே நிமிடங்களில் - அதாவது ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் மீண்டும் அதே அணி வீரர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டம் நிறைவுறும் வரை, சென்னை அணி கோல் எதுவும் அடிக்காததால், பெங்களூரு ஏ.எஸ்.ஸி. அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
மே 29 அன்று (நாளை) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அந்த அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பெங்களூரு எச்.ஏ.எல். அணியுடன் விளையாடவுள்ளது.
இன்று மாலையில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், சென்னை சிட்டி பொலிஸ் அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதுகின்றன.
நேற்றைய போட்டியில், சிறப்பு விருந்தினராக, காயல்பட்டினம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள பி.எச்.எம். ரெஸ்டாரென்ட் சிக்கன் கார்னர் நிறுவனத்தின் அதிபர் ஹாஜி பிரபு ஹபீப் முஹம்மத் கலந்துகொண்டார். அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நேற்றைய போட்டியில், நகரின் பல பகுதிளைச் சேர்ந்த ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கண்ணைக் கவர்ந்த காட்சிகள்:
காலிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, சென்னை வருமான வரித்துறை அணிக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. காயல்பட்டினம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் நிறுவனத்தின் அனுசரணையிலான அப்பரிசை, அதன் அதிபரும், இன்றைய போட்டியின் சிறப்பு விருந்தினருமான ஹாஜி பிரபு ஹபீப் முஹம்மத், சென்னை அணியினரிடம் வழங்கினார்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
M.T.ஹபீப் முஹம்மத்
[கூடுதல் படம், தகவல் இணைக்கப்பட்டுள்ளன @ 09:46 / 29.05.2013] |