அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் - நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
07ஆவது வார்டு பொதுமக்களுக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம், இம்மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அதில், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்ட நெருக்கடி காரணமாக - விபரங்கள் பதிவு செய்யப்படும் கணனி கருவிகளின் அருகில் பொதுமக்கள் ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு நின்றதால், விளைவையுணர்ந்த முகாம் நடத்துநர்கள் தமது பணிகளைச் செய்யத் தயக்கம் காட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காவல்துறையினரை முகாம் நிகழ்விடம் சென்று சீர் செய்யக் கேட்டுக்கொண்டதையடுத்து, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணியுடன் இணைந்து, காவல்துறையினர் பொதுமக்களை வரிசைப்படுத்தி, முகாம் பணிகள் தொடர வழிவகை செய்தனர். |