காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அந்த வரிசையில், நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சி, இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று (நாளை) காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகிய மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் வரழைக்கப்பட்டு பாராட்டி - பரிசளிக்கப்படவுள்ளனர்.
நாளை மதியம் 02.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, நாளை மாலை 04.30 மணிக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில், மாநிலத்தின் முதன்மதிப்பெண் பெற்ற சாதனையாளர்களுக்கும், நகர சாதனையாளர்களுக்கும் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சிகள் குறித்து இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரங்கள் வருமாறு:-
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சியை முன்னிட்டு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஒருங்கிணைப்பில் - அதன் நிர்வாகிகள், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிர்வாகிகள், ரெட் ஸ்டார் சங்க தலைவர் ஷேக் அப்துல் காதிர், அதன் நிர்வாகி ஆஸாத் உள்ளிட்ட குழுவினரின் மேற்பார்வையில், நிகழ்விடமான காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
|