காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் சேதுக்குவாய்த்தானிலுள்ள தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த அபுல் பரக்காத் - முஹ்யித்தீன் இப்றாஹிமா ஆகியோரின் மகன் முஹம்மத் முஹ்யித்தீன். வயது 22. சென்னை வேல்ஸ் பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு பொறியியல் பயின்று வருகிறார்.
இவருக்கு அப்துல் ஷுக்கூர் என்ற ஒரேயொரு தம்பி உள்ளார். அவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரி படிப்பில் சேரவுள்ளார். இவர்களது தந்தை அபுல் பரக்காத் 40 நாட்களுக்கு முன் சென்னையில் காலமானார்.
விடுமுறையில் ஊர் வந்துள்ள மாணவர் முஹம்மத் முஹ்யித்தீன், தன் நண்பர்கள் 5 பேருடன், 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) மதியம் 02.00 மணியளவில், ஏரல் அருகேயுள்ள சேதுக்குவாய்த்தான் தாமரிவருணி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
குழுவாகச் சென்ற அனைவரும் ஆற்றோரத்தில் குளித்துக்கொண்டிருக்க, முஹம்மத் முஹ்யித்தீனும் இன்னொருவரும் மட்டும் தொலைவு வரை நீந்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுள் ஒருவர் கரை திரும்பிவிட்டார். முஹம்மத் முஹ்யித்தீன் திரும்பும்போது, ஆற்றில் படர்ந்துள்ள அமலைச் செடிக்குள் கால் அகப்படவே, கையை உயர்த்திக் காண்பித்து தன்னைக் காப்பாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கான முயற்சியில் நண்பர்கள் இறங்குவதற்கு முன் அவர் ஆற்றில் மூழ்கிவிட்டார். பின்னர் நண்பர்களும், அங்கிருந்தோரும் நீண்ட நேரம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர், ஏரல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினத்திலுள்ள அவரது உறவினர்களுக்கு மாலை 04.30 மணியளவில் தகவல் கிடைக்கவே, உடனடியாக உறவினர்களும், நண்பர்களும், அவரது தெருவைச் சேர்ந்தவர்களும் ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு ஏரல் காவல்துறையினரும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினரும், ஆற்றில் மூழ்கிய மாணவரைத் தீவிரமாகத் தேடினர்.
இரவு நேரம் நெருங்கியதையடுத்து, ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு, மின் விளக்குகள் உதவியுடன் தேடும் முயற்சி தொடர்ந்தது. நள்ளிரவு 01.00 மணி வரை தேடியும் மூழ்கிய மாணவரைக் காண முடியவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூலை 01) காலையில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புப் படை அதிகாரிகள், படகு மூலம் மீண்டும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், அவரது உடல் ஏரல் சேர்மன் சுவாமி கோவில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் அமலைச் செடிக்குள் சிக்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படகில் இருந்தவாறு, கயிறு கட்டி அவரது உடல் மீட்கப்பட்டது.
ஏரல் காவல்துறை ஆய்வாளர் ராமராஜன், துணை ஆய்வாளர் அருள் சாம்ராஜ் ஆகியோர் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல் ஸ்ரீவைகுண்டத்தில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தகவல்:
S.ஷம்சுத்தீன் |