சாதிச்சான்று, வருமானச்சான்று, முதல் பட்டதாரி சான்று, கணவரால் கைவிடப்பட்ட பெண் சான்று, நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் போன்றவை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
தூத்துக்குடி மத்திய கூட்டுறவு பண்டகசாலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக வருவாய்த் துறையிலிருந்து சான்றிதழ்கள் விநியோகிக்கும் பொதுச் சேவை மையம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் தலைமையில், மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா முன்னிலையில் நடைபெற்றது.
மின் ஆளுமை திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக வருவாய்த் துறையிலிருந்து சான்றிதழ்கள் விநியோகிக்கும் பொதுச் சேவை மையத்தை, 8 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் அம்மா பொதுமக்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் மனு கொடுத்த மறு நிமிடமே சான்றிதழ் பெறும் திட்டத்தை - மாநிலம் முழுவதும் துவக்கி வைக்க ஆணையிட்டு இருந்தார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக வருவாய்த் துறையிலிருந்து சாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, கணவரால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், நிரந்தர இருப்பிடச் சான்று ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரும் விரைவாக சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.
தூத்துக்குடி வட்டத்தில் மீளவிட்டான், மாப்பிள்ளையூரணி, வர்த்தகரெட்டிபட்டி, புதுக்கோட்டை, மேலதட்டப்பாறை, கோரம்பள்ளம், முடிவைத்தானேந்தல், குலையன்கரிசல், மத்திய கூட்டுறவு வங்கி (தூத்துக்குடி நகரம்) போன்ற இடங்களில் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிரிவினரும் 5 வகையான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனை தொடா;ந்து மற்ற 7 வட்டங்களிலும் ஆகஸ்ட் மாதம் முதல் சேவை மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் வருவாய்த் துறை மூலம் 5 வகையான சான்றிதழ் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி வட்டத்தில் 9 இடங்களில் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் விரைவில் துவக்கப்படவுள்ளது.
கன்னியாகுமரி, பெரம்பலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், தற்போது நமது மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என அரசின் அனைத்துத் துறைகளிலும் இந்த வசதி செய்யப்படும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேசினார்.
இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன் வரவேற்றுப் பேசினார். கூட்டுறவு சார்பதிவாளர் சி.ராமசுப்பு நன்றி கூறினார். |