பள்ளிப் படிப்பை சுமையாகக் கருதாமல் சுவையாகக் கருதி படித்தால், எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற - நகர பள்ளி மாணவ-மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அந்த வரிசையில், நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சி, இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகிய மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஜூன் 29 அன்று மதியம் 02.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியின் டீன் அபூபக்கர், அதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் காழி அலாவுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது. காயல்பட்டினம் நகரின் இணையதள எழுத்தாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் இந்நிகழ்ச்சியில் மாநில சாதனை மாணவர்களான எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகியோரை நேர்காணல் செய்தார்.
பள்ளிப் படிப்பை சுமையாகக் கருதாமல் சுவையெனக் கருதிப் படித்தால், எதிர்பார்க்கும் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும், படிப்பின் மீது அதிக அக்கறை எடுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகளைக் கைவிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் கூறினர்.
பின்னர், மாநில சாதனை மாணவர்களின் பெற்றோரும் சில கருத்துக்களைக் கூறினர்.
பொதுவாக, வீட்டிலிருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளை எப்போதும் படி, படி என்று நச்சரித்துக் கொண்டேயிராமல், மீது தகுந்த கண்காணிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையான ஒத்துழைப்புகளை அளித்து, ஊக்கமூட்டி வந்தால், கண்டிப்பாக பிள்ளைகள் வெற்றியாளர்களாகத் திகழ முடியும் என்று தமது கருத்தைக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்றனர். மாணவ-மாணவியருள் பலரும் மாநில சாதனை மாணவர்களிடம் படிப்பு குறித்த பல்வேறு கேள்விகளைக் கேட்க, அவற்றுக்கு போதிய தகவல்களை விடையாக அளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர். |