மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி Dr.ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் காயல்பட்டினத்தில் உள்ள விற்பனையகங்களில் - ஜூலை 3 (புதன்கிழமை) அன்று - திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூலர்கடை பஜாரில் உள்ள சில பிரதான கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது - தடை செய்யப்பட்டுள்ள சுமார் ரூபாய் முப்பதாயிரம் மதிப்பிலான - பான் பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கில் அழிக்கப்பட்டன.
ஒரு மாதத்திற்கு முன்பே அரசு தரப்பில் செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனும் தகவல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், அதையும் மீறி சில கடைகளில் அப் பொருட்களைப் பதுக்கி வைத்தும் மறைமுகமாக விற்பனை செய்து வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பான்பராக், குட்கா, புகையிலை போன்றவற்றை தடுப்பதற்காக திரு குமார் ஜெயந்த் IAS தலைமையில் மாவட்ட சேர்மனாக திரு ஆஷிஸ் குமார் IAS, அதன் உறுப்பினர்களாக மாவட்ட SP, DRO, சுகாதார துணை இயக்குநர், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தலா ஒரு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சில உணவகங்களிலும் தரப்பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் பல இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து இது போன்ற பொருட்கள் உபயோகிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் அடுமனைகள் சோதனையிடப்பட்டன. காலாவதியான உணவுப் பொருட்கள், லேபில் இல்லாத பாக்கெட் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உபயோகிக்க தகுதியற்ற தண்ணீர் பாட்டில்கள் சோடா மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை அடங்கும். தேனீர்கடைகளில் தேயிலைத்தூள் பரிசோதன செய்யப்பட்டது.
பொது மக்கள் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவித்ததுடன் உணவகங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இனி இது போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டால் பதுக்கல் மற்றும் விற்பனை செய்வோருக்கு அதிகபட்சமாக ஐந்து இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருவதோடு இத்தகைய சமூக கேடுகளை களைவதற்கு எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தனது கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி Dr.ஜெகதீஷ் சந்திர போஸ் வழங்கினார். [கைபேசி எண்: 9443151996 ; மின்னஞ்சல்: dofssatut@gmail.com].
இந்த சோதனைகள் போது உணவு பாதுகாபுத்துறை அலுவலர்களான பொன் ஞானசேகர், மாரியப்பன், பாலசுப்ரமணியன், முத்துராஜ், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் சி.பொன்வேல் ராஜ், வி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்;
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |