காயல்பட்டினம் நகராட்சியில் - பொது நிதி (5 பணிகள் - மதிப்பு ரூபாய் 43 லட்சம்), IUDM திட்ட நிதி (10 பணிகள் - மதிப்பு ரூபாய் 97 லட்சம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திட்ட நிதி (3 பணிகள் - மதிப்பு ரூபாய் 21 லட்சம்) ஆகியவை மூலம் - 161 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 18 பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த அக்டோபர் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் IUDM திட்டத்திற்கு கீழான 3 பணிகள், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளாகும்.
15 சாலைப் பணிகளில், 3 சாலைப்பணிகள் (அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு மற்றும் நெய்னார் தெரு) - சாலையை முற்கூட்டியே தோண்டி, நிறைவேற்றப்படவேண்டியவை. இந்த மூன்று சாலைப்பணிகளை மேலோட்டமாக பார்க்கும்போதே, சாலைகள் முறைப்படி தோண்டப்படவில்லை என தெரிந்தது. ஆகவே - இது குறித்து விசாரிக்கும்படி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - மாவட்ட ஆட்சியர் அமைத்த ஆய்வு குழு, மூன்று சாலைகளையும் பார்வையிட்டது. மூன்று சாலைகளில் - நெய்னார் தெரு சாலைப்பணிகள் மட்டும் ஓரளவு நடைப்பெற்றிருந்ததால் - அச்சாலையை மட்டும், ஆய்வு குழு பரிசோதனை செய்தது. அந்த குழு தயாரித்த ஆய்வறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பெறப்பட்ட ஆய்வறிக்கையை, மாவட்ட ஆட்சியர் - சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாகத்துறையின் ஆணையருக்கு அனுப்பிவைத்தார்.
12 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நெய்னார் தெரு சாலை பணியில், நகராட்சியின் பதிவேட்டில் - ரூபாய் 8,87,535 மதிப்பிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக (நகராட்சியின்) M புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுவரை நிறைவு செய்யப்பட்ட இப்பணிகளின் மதிப்பு ரூபாய் 6,75,214 ரூபாய் மட்டும் என்றும் - ஆகவே ரூபாய் 2,12,321 அளவிற்கு முறைக்கேடு நடந்திருப்பதாக தெரிகிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது.
அரசு அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் - ஆசாத் தெரு சாலைப்பணியையும், அப்பாபள்ளி தெரு சாலைப்பணியையும் ஒப்பந்ததாரர் நிறுத்தி வைத்திருந்தார். தற்போது அச்சாலைப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இன்று ஆசாத் தெருவில் சாலைப்பணிகள் நடைப்பெற்றப்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்:
புகைப்படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |