சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 28.06.2013 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 72-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 72-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 28.06.2013 வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணியளவில், மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான், இல்லத்தில் வைத்து நடைபெற்றது. சகோ.எஸ்.ஹெச். ஹுமாயூன் கபீர் தலைமை தாங்க, சகோ. நஹ்வி எ.எம்.ஈசா ஜக்கரியா இறைமறை ஓதி துவக்க, சகோ.சொளுக்கு,எஸ்.எம்.ஐ.செய்யது முஹம்மது சாஹிப் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
அடுத்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ.எஸ்.ஹெச். ஹுமாயூன் கபீர், தான் சமீபத்தில் ஊரில் இருந்த போது நாம் இந்த மன்றம் மூலம் செய்யும் நல்ல பணிகளை, பலர் மனமுவந்து பாராட்டி பேசியதையும், இன்னும் நமக்காக பிரார்த்தனை செய்ததையும் காணமுடிந்தது. தேவை அறிந்து வறியவர்களின் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்ததை நாம் மனமுவந்து உதவி செய்யும் போது அவர்கள் நமக்காக இறைவனிடம் வேண்டும் 'துஆ' என்றும் வீண் போவதில்லை. நாம் நமது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் மக்களின் நலனுக்காக இங்கு ஓன்று கூடியிருக்கிறோம். எனவே நமது சகோதரர்களுக்கும் இதன் சேவைதனை எடுத்துரைத்து, நாம் ஒன்றுபட்டு செலுத்தும் சிறு சந்தாவானது ஒரு பெரும் தொகையாக பல ஏழைகளை சென்றடைகிறது என்றும்; அதன் மூலம் இறைவன் புறத்திலிருந்து நாம் பெறும் பலன் மிக உயர்வானது எனவே சந்தாக்களை முறைப்படி செலுத்தி இன்னும் கூடுதலாக சேவை புரிந்திட வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக
என்று தனதுரையை சுருக்கமாக நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்ட அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் விபரமாக எடுத்துக்கூறினார். பிறகு மக்ரிப் தொழுகைக்குப்பின் தேங்காய்,மாங்காய் கூட்டணியுடன் சுண்டல்,பக்கோடா,
தேனீருக்குப்பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்தது.
உலக காயல் நலமன்றங்களின் ஒன்றிணைப்புடன் ஒருமித்தகருத்தொற்றுமையுடன் கூடிய விரைவில் புதியதாக உதயமாகவிருக்கும் மருத்துவ கூட்டமைப்பான 'ஷிபா' பற்றிய தற்போதைய நிலை, மற்ற காயல் மன்றங்கள் தந்த கருத்து பரிமாற்றம், அதன் பரிணாம வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பன போன்ற விளக்கங்கள் தந்து, உறுப்பினர்களின் வினாக்களுக்கும், கருத்துக்களுக்கும் இம்மன்றத்தின் தலைவர் சகோ. குளம், எம்.எ. அஹமது முஹிய்யதீனுடன் சேர்ந்து கூட்டாக , நல்ல பல கருத்துக்கள் தந்து, சந்தாவுடன், நன்கொடைதனையும் செலுத்தி இம்மன்றம் தொய்வில்லாமால் தொடர்ந்து நற்சேவை செய்திட நாம் எல்லோரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று வேண்டி தனதுரையை நிறைவு செய்தார். மன்றத்தின் மற்றுமொரு செயலாளர் சகோ. எம்.எ. செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை அறிக்கை :
வரவேண்டிய சந்தாக்கள், பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் கல்விக்கென ஒதுக்கிய தொகை, போன்ற முழு விபரங்களையும் நிதி நிலை அறிக்கையாக சமர்பித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
சிறப்பு விருந்தினர் :
தாயகத்திலிருந்து ஜித்தா வந்துள்ள சகோ. ஹாஜி ஏ.ஹெச்.முஹம்மது பிள்ளை லெப்பை அவர்கள் இச்செயற்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மருத்துவ உதவிகள்:
தாயகத்தால் மருத்துவ உதவி வேண்டி வந்திருந்த விண்ணப்பங்கள் யாவும் மருத்துவ சான்றிதழ் மற்றும் ஜமாத் பரிந்துரையின்படி முறைப்படுத்தப்பட்டு அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு கழுத்து,கர்ப்பப்பை மற்றும் இரத்த புற்றுநோய் கண்டு அவதியுறும் நான்கு பயனாளிகளுக்கும், கர்பப்பையில் கட்டி என ஒருவருக்கும் மற்றும் தொடர் சிகிச்சை பெரும் இருவருக்கும், என ஆக மொத்தம் ஏழு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவுசெய்யப்பட்டு, அவர்களின் பூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானம்:
1 - உலக காயல் நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான 'இக்ரா' விற்கு ஆயுட்கால உறுப்பினராக இணைவதற்கு குறைந்தது 20 உறுப்பினர்களுக்கு மேலாக நம் மன்றத்தின் சார்பாக சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
2 - ஒவ்வொரு வருடமும், +2 பொது தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெறும் மாணவ மாணவியரை நம் காயல் மண்ணுக்கு அழைத்து வந்து, "சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை" என்ற நல்லதோர் நிகழ்வினை நடத்திவரும் இக்ராவிற்கும், காயல் பர்ஸ்ட் டிரஸ்ட்டிற்கும்,+2 மற்றும் பத்தாம் வகுப்புகளின் பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற நமதூர் மாணவ மாணவிகள் அனைவருக்கும் இம்மன்றம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.
3 - கலை அறிவியல் உயர் கல்விக்கான உதவி தொகை கடந்த பல ஆண்டுகளைப்போல் இந்தாண்டும் வழமைப்போல் மூன்று நபர்களுக்கு மூன்றாண்டுக்கான கல்விக்காக இக்ராவின் மூலமாக வழங்கிடவும், மேலும் சுழற்சி முறையில் இந்தாண்டுக்கான இக்ரா புதிய தலைவராக எமது மன்றத்தின் தலைவர் சகோ. குளம்,எம்.எ.அஹமது முஹிய்யதீன் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று இருப்பதால் இக்ராவின் வருடாந்திர நிர்வாக செலவிற்கு வழமையை விட கூடுதலாக நிதி அளிக்கவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
4 - அடுத்த 73வது செயற்குழு கூட்டம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியுடன் இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் புனித ரமழான் மாதம் ஜூலை 26 ஆம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில், கடந்தாண்டுகளைப்போல் ஜித்தா,ஷரபியா ,ஆர்யாஸ் உணவகத்தில் வைத்து நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.
நன்றி நவிலல்:
சகோ. பிரபு ,எஸ்.ஜே.நூருதீன் நெய்னா நன்றி நவில, சகோ. எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இரவு உணவுக்குப்பின் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
கூட்டத்திற்கான முழு அனுசரணையை சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும்
சகோ. சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி இருவர்களும் நல்லபடி செய்து இருந்தார்கள். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மங்களம் பேட்டை, சகோ., எ.எஸ். ஜாபர் சாதிக்,சகோ,எம்.சித்திக் மற்றும் சகோ.பொறியாளர்,ஜி.எம்.முஹம்மது சுலைமான் ஆகியோர் மிக சிறப்புடன் செய்து இருந்தனர்.
தகவல் மற்றும் நிழல்படம்
சகோ.எஸ்.எச்.அப்துல் காதர் ,
சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,
காயல் நற்பணி மன்றம்-ஜித்தா.
01-ஜூலை-2013
|