தேசிய பெண்கள் முன்னணி (NWF) காயல் பட்டணம் கிளை சார்பில் “ரமழானை வரவேற்போம்” என்ற பெண்களுக்கான நிகழ்ச்சி கடந்த 05.07.2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயிதே மில்லத் நகரில் அமைந்துள்ள அன்னை கதீஜா (ரலி) மதரஸாவில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.15 மணியளவில் (05.07.2013) துவங்கிய நிகழ்ச்சியின் துவக்கமாக இறைமறை வசனங்கள் ஒதப்பட்டன.
பின்னர் சகோதரி ஜெய்னுல் அரபா ஆலிமா அவர்கள் “புண்ணியமிகு ரமழானை பூரிப்புடன் வரவேற்போம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ரமழானின் சிறப்புகளை எடுத்தியம்பிய சகோதரி, புனித திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டதனாலேயே இம்மாதம் சிறப்படைந்தது என்றும், ஆதலால் அந்த மாதத்தின் சிறப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அதிகமதிகம் திருக்குர்ஆனை ஓதுதல், இபாதத்துகளை அதிகப்படுத்துதல், லைலத்துல் கத்ர் என்னும் சங்கைமிக்க இரவின் அருளைப் பெறுதல் என்று அத்தனை நல் அமல்களையும் செய்து நன்மைகளைக் கொள்ளையடித்து இம்மாதத்தைக் கண்ணியப்படுத்தவேண்டும் என்றும் தனது சிறப்புரையில் அழகாகக் குறிப்பிட்டார்.
இறுதியில் கஃப்பாரா ஓதப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|