காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், ஜூன் மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டப் பொருட்கள் (அஜெண்டா):
இக்கூட்டத்தில், பின்வரும் 29 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தன:-
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில்,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா,
அண்மையில் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்
ஆகியோரைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
05ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:
கூட்டபொருட்களை நகராட்சி ஊழியர் செந்தில் வாசிக்கத் துவங்கியவுடன், குறுக்கிட்டுப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் - கொம்புத்துறை / சிங்கித்துறை பெயர்கள் பயன்பாடு குறித்து மேசைப் பொருள் (டேபிள் அஜெண்டா) கொண்டு வரவேண்டும் என கூறினார்.
தற்போது நகரில் நடைபெற்றுவரும் தேசிய மக்கள் தொகை / ஆதார் அட்டை பதிவு முகாம்களில் கடையக்குடி / கற்புடையார் வட்டம் என்ற பெயர்களுக்குப் பகரமாக, கொம்புத்துறை / சிங்கித்துறை என்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், டேபிள் அஜெண்டா என்பது கூட்டத்தின் இறுதியில் கொண்டு வர வேண்டியது என்று கூறி, அலுவலர்களை டேபிள் அஜெண்டா பொருளை ஆயத்தம் செய்யுமாறு கூறிவிட்டு, திட்டமிடப்பட்ட படி, ஜூன் மாத கூட்டத்தைத் துவக்கலாம் என்று கூறினார்.
டேபிள் அஜெண்டா விவாதிக்கப்பட்ட பின்னரே, பிற கூட்டப் பொருட்கள் பேசப்பட வேண்டும் என உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் வலியுறுத்தினார். இதுவரை வழமையாக நகர்மன்ற கூட்டங்களில் - டேபிள் அஜெண்டா இறுதியாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என நகர்மன்றத் தலைவர் விளக்கினார். தலைவரின் விளக்கத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, முதலில் டேபிள் அஜெண்டா விவாதிக்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.
டேபிள் அஜெண்டா பொருள் - உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்கு ஏறத்தாழ 90 நிமிடங்கள் (1 மணி நேரம் 30 நிமிடங்கள்) நேரம் எடுத்தது. டேபிள் அஜெண்டா பொருளில், நகரின் அனைத்துப் பகுதிகளின் பெயர்களும் அரசு ஆவணங்களின் படி இருக்கவேண்டும் என நகர்மன்றத் தலைவர் கூறினார். இதற்கு ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேசைப் பொருள் (டேபிள் அஜெண்டா) வாசகம் வருமாறு:-
டேபிள் அஜெண்டா வாசிக்கப்பட்டவுடன், 07ஆவது வார்டு உறுப்பினருக்கும், பிற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக, கொம்புத்துறை / சிங்கித்துறை என்பதற்கு பதிலாக கடையக்குடி / கற்புடையார் வட்டம் என்ற பெயர்களையே அனைத்து அரசு அலுவலகங்களும் பயன்படுத்த வேண்டும் என்று கோரி கடிதம் எழுத தீர்மானிக்கப்பட்டது. மேலும் நகரின் இதர பகுதிகளின் பெயர்களும் அரசு ஆவணங்கள்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
18ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற ஊழியர் செந்தில் ஜூன் மாத கூட்டப்பொருளை வாசிக்கத் துவங்கினார். கடந்த மாத கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொருளான பொருள் எண் 1 குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி புதிய பிரச்சனை ஒன்றை எழுப்பினார். தான் கூட்டத்தில் இணைக்க இரு விஷயங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் ஒரு விஷயம் கூட்டப்பொருளில் இணைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நகர்மன்றத் தலைவர், இணைக்கப்படாத கூட்டப்பொருள் (13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் - அண்மையில் அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் போலியாக இணைந்ததாக கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் கூறியதிற்குக் கண்டனம் தெரிவித்து) - நகராட்சி விதிகளுக்கு உட்படாதது என்றார். நகராட்சி ஆணையரும் - மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 20இன் படி நகர்மன்ற நிர்வாகம் குறித்த அம்சங்களை மட்டுமே உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட 18ஆவது வார்டு உறுப்பினர், “அப்படியானால், கடந்த கூட்டத்தில் எவ்வாறு நகர்மன்ற ஊழியரைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர், அது நகராட்சியால் வழங்கப்படும் ரசீது குறித்தது என்பதால் நகராட்சி நிர்வாகம் தொடர்பான தீர்மானம் அது என்றார்.
12ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:
அடுத்து 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, தனது வார்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு வண்டியில் தண்ணீர் வழங்க நகர்மன்றத் தலைவர் மறுத்ததாக குற்றஞ்சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தான் அப்பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரிடம் பேசியதாகவும், தேவையான குடிநீர் அளவு குறித்து அவரிடம் கேட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் நின்றதற்கான காரணத்தை அறிந்து நிரந்தர தீர்வு வழங்குவதே முறை என்றும் கூறினார்.
வாய்மொழியால் கேட்கப்பட்டால் வண்டி மூலம் குடிநீர் வழங்கக்கூடாது என்றும், எழுத்து மூலமாக கேட்கப்பட்டால் மட்டுமே பரிசீலனை செய்யவேண்டும் என்றும், அப்போதுதான் வண்டி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் குறித்து கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அடுத்து, 12ஆவது வார்டு உறுப்பினர் - இரண்டாம் குடிநீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். பொன்னன்குறிச்சியில் வேலைகள் நின்றிருப்பதாகவும், இதற்கு நகர்மன்றத் தலைவியின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் கூறினார். அதற்கு பதில் கூறிய நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் முழுமையான தகவலை வழங்க வேண்டும் என்றும், பொன்னன்குறிச்சியில் பணிகளுக்கு நிலத்திற்கு உரிமை கோரி இடையூறு செய்யும் பெண் - 4 லட்ச ரூபாய் தொகையும், நகராட்சியில் பணியும் கேட்பதாகவும் கூறியதுடன், குடிநீர் திட்டம் 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற வேண்டியுள்ள நிலையில், ஒவ்வொரு தனி நபரும் பிரச்சனைகள் செய்யும்போது அவர்களுக்குப் பணம் கொடுத்து பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்றும், எனவே இப்பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறினார்.
பார்வையாளருடன் நகர்மன்ற துணைத்தலைவர் மோதல்:
இவ்வாறு விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் - பார்வையாளர்களை நோக்கி, “இங்கு பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை!” என்று கூறினார்.
தொடர்ந்து பார்வையாளர்கள் பக்கம் வேகமாக வந்த அவர், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த முஹ்யித்தீன் என்பவரை நோக்கி, “என்ன முறைக்கிறே...?” என கூறி - அரங்க வாயிலில் நின்ற காவல்துறையினரை அழைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“நாக்கை ஒட்ட அறுத்துடுவேன்...”:
பார்வையாளர்கள் என்ன பேசினார்கள் என நகர்மன்றத் தலைவர் வினவ, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், நகர்மன்றத் தலைவரை கடுமையான சொற்களால் விமர்சிக்கத் துவங்கினார். ஒரு கட்டத்தில், “(தலைவியின்) நாக்கை ஒட்ட அறுத்துடுவேன்...!” என்றும் கூறினார். (விரிவான விபரம் இதனடியில் தரப்பட்டுள்ள அசைபட (வீடியோ) காட்சியில் உள்ளது.)
கூட்டம் ஒத்திவைப்பு - உறுப்பினர்கள் வெளிநடப்பு:
கூட்டத்தில் சலசலப்பு தொடரவே - கூட்டத்தை ஒத்திவைப்பதாக நகர்மன்றத் தலைவர் அறிவித்தார். அப்போது நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தான் எழுதிக்கொண்டு வந்திருந்த மடலை வாசித்தார்.
அதில், மே மாதம் 03ஆம் தேதியன்று - விதிகளை மீறி நகர்மன்றத் தலைவி தீர்மான புத்தகத்தை நகல் எடுத்ததாகவும், அதனைத் தட்டி கேட்ட உறுப்பினர்கள் மீது உயர்நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி, இதற்காக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, கூட்டரங்கை விட்டும் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, 13 வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எனவே, திட்டமிடப்பட்ட 29 கூட்டப்பொருட்களில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அசைபட (வீடியோ) பதிவு:
இதுகுறித்த அசைபடப் பதிவை (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக! |