காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், நகர அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விபரம் வருமாறு:-
அ.தி.மு.க.வின் நகர வார்டு முன்னாள் செயலாளரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான எஸ்.ஏ.முகைதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆறுமுகநேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அன்றே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கொடுத்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
எஸ்.ஏ.முகைதீன் தன்னை வழிமறித்து மிரட்டியதாக மும்பை முகைதீன் தனது புகாரில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் காயல்பட்டினம் பேரூந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த எஸ்.ஏ.முகைதீன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இத்தகவலறிந்ததும், அவரது ஆதராவாளர்களும் காவல் நிலையத்திற்குத் திரண்டு சென்று, இது பொய் வழக்கு என காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.முகைதீனை, கையில் விலங்கு மாட்டி, சாத்தான்குளம் மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் செய்து, மூன்று நாட்கள் சிறையில் வைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். கை விலங்கு மாட்டுவதற்கு கூடியிருந்தவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே, கை விலங்கு மாட்டாமல், அவரை காவல்துறையினர் சாத்தான்குளம் அழைத்து சென்றனர்.
அங்கு நீதிபதி முன் ஆஜரான எஸ்.ஏ.முகைதீனை, தனது சொந்த ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமையன்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.ஏ.முகைதீனுக்கு நீதிமன்றம் 15 நாட்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்கியது.
கடந்த மார்ச் மாத இறுதியில், அ.தி.மு.க.வில் இணைந்த நகர்மன்றத் துணைத்தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் உண்மையாக கட்சியில் இணையவில்லை என்றும், இது சென்னையிலிருக்கும் தொழிலதிபர் ஒருவரின் நாடகம் என்றும், இதற்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உடந்தை என்றும் எஸ்.ஏ.முகைதீன், அண்மையில் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[செய்தி திருத்தப்பட்டது @ 5:30 pm / 6-7-2013] |