நகராட்சிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளை எவ்வாறு தணிக்கை செய்வது என்பதற்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 2012-இல் ஒருங்கிணைந்த சார்நிலை பணி தொகுதி I தேர்வு நடத்தியது. இதில் தேர்வு
பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவனத்
தணிக்கைத் துறைக்கு என 367 பேர் உதவி ஆய்வர் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
உதவி ஆய்வர்களாக தெரிவானவர்களுக்கு 05.07.2013 முதல் 03.10.2013 முடிய உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையானது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அரசுப் பணியில் உதவி ஆய்வர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பல்கலைக்கழகங்கள், கதர் வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், சத்துணவு திட்டம் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களை எவ்வாறு
தணிக்கை செய்வது என்பது குறித்து முழுமையான அளவில் பயிற்சிகள் மூன்று மாத காலம் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சியானது சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகக் கல்லூரியில் 05.07.2013 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இப்பயிற்சி 03.10.2013–இல் முடிவடையும் நாளில் முறையான பணி நியமன ஆணை அரசால் வழங்கப்படும்.
தொடக்க விழாவிற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் இயக்குநர் திரு.ஜெ.கயிலைநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சென்னை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் (பணி) திரு.சு.மனோகரன் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு நிதித் துறை கூடுதல் செயலர், திரு. கே. அண்ணாதுரை,எம்.ஏ., அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று தணிக்கைத் துறையின் அவசியம் மற்றும் அரசு நிதிச் சிக்கனத்தில் இத்துறையின் பங்களிப்பு பற்றி சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் திரு. T.J. ஹரிகிருஷ்ணன் அவர்களும், சென்னை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.K.ஜெயகுமார், துணை இயக்குநர் அவர்களும் புதிதாக அரசுப்
பணியில் சேர்ந்த உதவி ஆய்வர்களுக்கு அரசுப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
|