நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, இம்மாதம் 21ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமையன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்திட, ஆந்திய மாநிலம் ஹைதராபாத் காயல் நல மன்றத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, ஆந்திரம் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில், காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் ஹைதராபாத் காயல் நல மன்றத்தின் 4ஆவது பொதுக்குழுக் கூட்டம், 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான ஹாஜி பி.எஸ்.முஹம்மத் ஹஸன் தலைமையுரையாற்றினார். துவங்கப்பட்ட நாள் முதல் மன்றம் ஆற்றிய நகர்நலப் பணிகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர், மன்றத்தின் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மன்ற உறுப்பினர் தாயார் மறைவுக்கு இரங்கல்:
உறுப்பினர் டாக்டர் மீரா ஸாஹிப் அவர்களின் தாயார் மறைவை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஹைதராபாத் காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், மறைந்த மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொருத்தருளி, அவர்களது மண்ணறை - மறுமை வாழ்வுதனை சுவனப் பூஞ்சோலைகளாக ஆக்கியருள, இக்கூட்டம் உளமார பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 – வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
மன்றப் பொருளாளர் ஏ.எச்.முஹம்மத் இஸ்மாஈல் கூட்டத்தில் சமர்ப்பித்த வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 2 - நலிந்தோருக்கு சமையல் பொருளுதவி:
கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் மன்ற உறுப்பினர்களின் உறவினர்களுள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள 10 குடும்பத்தினர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு, எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் - அத்தியாவசிய சமையல் பொருட்களை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - தக்வாவுடன் இணைந்து இமாம் - பிலால் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்புடன் இணைந்து, வரும் புனித ரமழான் மாதத்தில், நமதூர் பள்ளிகளின் இமாம் – பிலால்களுக்கான ஊக்கத் தொகையை வழமை போல் வழங்குவதென இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அவ்வகைக்காக ரூபாய் 15 ஆயிரம் தொகையை ஒதுக்கி இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - உடுத்திய நல்லாடை உதவி:
காயல்பட்டினத்திலுள்ள வசதியற்றவர்கள் பயன்பாட்டிற்காக, உடுத்திய நல்லாடைகளைச் சேகரித்து வினியோகிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி:
இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் சார்பில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அதில் ஆந்திர மாநிலம் வாழ் அனைத்து காயலர்களையும் பங்கேற்க அழைப்பு விடுப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதனடிப்படையில், மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் இல்லத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும். ஹைதராபாத் நகர் உள்ளிட்ட ஆந்திர மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து காயலர்களும் இச்செய்தியையே தங்களுக்குத் தரும் அழைப்புக் கடிதமாகக் கருதி, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மன்றத்தை அதிக உறுப்பினர் எண்ணிக்கையுடன் இன்னும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள காயலர்கள்,
SL ABDUL BARI
Mob: 099896 35357 / 09948316779
Brindavan Colony, Galaxy,
Tolichowki
Hyderabad - 500 028
என்ற விபரப்படி தொடர்புகொண்டு, முற்கூட்டியே உங்கள் வருகையை உறுதி செய்துகொள்வதன் மூலம், இஃப்தார் ஏற்பாடுகளை குறைவின்றி நிரப்பமாகச் செய்திட உறுதுணை புரியுமாறு அனைவரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு, ஹைதராபாத் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
அப்துர்ரஹ்மான் மவ்லானா |