பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் இலவச முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 170 மாணவ-மாணவியர் பயன்பெற்றனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சிறப்பாக நடைபெற்ற கல்வி உதவி இலவச விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் முகாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சார்பில் 07.07.2013 ஞாயிறு அன்று சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் (ஸ்காலர்ஷிப்) இலவச விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ப்ரி மெட்ரிக் (Pre Matric) & போஸ்ட் மெட்ரிக் (Post Matric) கல்வி உதவித் திட்டங்கள் மூலம் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் அரசால் வரவேற்கப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சமூக மேம்பாட்டுத் துறை (Community Development Department) சார்பில் இலவச முகாம் 7.07.2013 ஞாயிற்றுக் கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.டி.எம். தெருவிலுள்ள மஜ்லிஸுல் கௌது சங்கத்தில் (தாயிம் பள்ளி வளாகம்) நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கே பொதுமக்கள் சாரை சாரையாக வரத் துவங்கினர். குறிப்பாக பெண்கள் அதிகமாக வந்திருந்தனர். வரவேற்பு மேஜையில் வந்தவர்களின் பிள்ளைச் செல்வங்களின் பெயர், வகுப்பு, பள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
டோக்கன் எண் படி அவர்கள் அழைக்கப்பட்டு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய (Fresh) விண்ணப்பப் படிவமும், ஏற்கனவே விண்ணப்பித்து சென்ற வருடம் கல்வி உதவித் தொகை வாங்கியவர்களுக்கு பிதுப்பித்தல் (Renewal) விண்ணப்பப் படிவமும் இலவசமாக வழங்கப்பட்டு, நிரப்பப்பட்டன.
விண்ணப்பப் படிவங்களை பெண்களுக்கு நிரப்பும் பணிகளை தேசிய பெண்கள் முன்னணி ((NWF) சகோதரிகள் ஆர்வமாகச் செய்தனர். ஆண்களுக்கு நிரப்பும் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர்.
மதியம் 2 மணி வரை 170 மாணவ, மாணவியருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நிரப்பப்பட்டன.
நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. பின்னர் அவற்றை இணைத்து அவரவர் பள்ளியில் சமர்ப்பிக்கும்படி வழிகாட்டப்பட்டன.
ஆவணங்களை முழுமையாகக் கொண்டு வராத பெற்றோர்களுக்கு என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று கூறி, 15.08.2013க்கள் பள்ளியில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டன.
சென்ற வருடம் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை கிடைக்காத மாணவ, மாணவியரின் பெயர் விவரங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டன. அப்படி 26 புகார்கள் வந்தன. “இவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
அத்தோடு தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்தும் அரசு வேலைகளுக்கான TNPSC (Group I, II, III, IV) தேர்வுகளுக்கான சிறப்பு ஆலோசனைகளும் (Special Counselling) தேவையானவர்களுக்கு தனியாக வழங்கப்பட்டன. “வருகிற வாரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் TNPSC (Group I, II, III, IV) தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளன” என்று சகோ. ஷம்சுத்தீன் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல் நகரக் கிளை சகோதரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |