கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு, ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து இருநூற்று என்பத்து இரண்டு தொகையை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வழங்கினார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத் என்ற புகாரீ (வயது 40). இவர், இந்திய அஞ்சல் துறையின் - ரூபாய் 1 லட்சத்திற்கான கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து, தவணைப் பணம் செலுத்தி வந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அவர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருடைய வாரிசான நூருல் அய்னி (இறந்தவரின் மனைவி) என்பவருக்கு, காப்பீட்டுத் தொகை மற்றும் உபரித் தொகை ஆகியவற்றை உள்ளடக்கி, ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து இருநூற்று என்பத்து இரண்டு தொகை வழங்கப்பட்டது.
அஞ்சல்துறையின் திருச்செந்தூர் மண்டல உதவி கண்காணிப்பாளர் எம்.நியூட்டன் பாலகிருஷ்ணன் தலைமையிலும், காயல்பட்டினம் அஞ்சல் அலுவலர் பகவதி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பயனாளியிடம் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
காயல்பட்டினம் அஞ்சலக அலுவலர்களும், ஊழியர்களும் உடனிருந்தனர். |