இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட - இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கில், அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தலாக் - மனமுறிவு சான்றிதழ் வழங்க, காஜி (நாயிப் காஜிகள் என்ற கத்தீப், இமாம்)களுக்கு அதிகாரமில்லை; அவற்றை நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும் என, தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பதர் சயீத், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொதுநல வழக்கை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, இஸ்லாமிய கட்டமைப்பைக் காப்பாற்றும் வலுவான வாதங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களுக்கு - இஸ்லாமிய திருமண மற்றும் மணமுறிவு சட்டங்கள் குறித்து போதிய விபரங்களை அறியச் செய்திட வேண்டும் என்ற நோக்குடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், இம்மாதம் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, “இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ (காஜி)யும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் முன்னிலை வகித்தார்.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ கருத்துரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய அரசின் மத்ரஸா கல்வி மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், தமிழக அரசின் வக்ஃப் வாரிய உறுப்பினரும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. இஸ்லாமிய திருமண சட்டங்களை காப்போம்
இஸ்லாமிய திருமண சட்டங்களில் மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜி (ஙாயிப் காஜிகள் என்ற கத்தீப்-இமாம்கள்) களுக்கு அதிகார மில்லை, அவற்றை நீதிமன்றங்களை முடிவு செய்ய வேண்டுமென தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வழக்கை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாரும், தமிழக தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மனு தாக்கல் செய்துள்ளதை இக்கூட்டம் வரவேற்கிறது.
இஸ்லாமிய கட்டமைப்பை காப்பாற்றிட சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
2. மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை
பள்ளிவாசல்களை (மஸ்ஜிதுகளை) மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஹல்லா ஜமாஅத்துகள் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாகும். பள்ளிவாசலின் புனிதத்தையும் மஹல்லா ஜமாஅத்தின் ஒற்றுமை - கட்டுக்கோப்பு ஆகியவற்றையும் பாதுகாப்பது என்பது முஸ்லிம்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பாதுகாப்பதாகும்.
அத்தோடு, மஸ்ஜித், மதரஸா, ஜமாஅத்துக்களில் மார்க்க சேவையில் ஈடுபட்டுள்ள மார்க்க அறிஞர்கள் சமுதாயத்திற்குரிய சன்மார்க்க ஒளிவிளக்குகள் ஆவர். அவர்களுக்கு மதிப்பளிப்பதும், மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.
மஸ்ஜித், மஹல்லா ஜமாஅத்களுக்கு எதிராக போட்டி மஸ்ஜித், போட்டி ஜமாஅத் உருவாக்குவது சமுதாய கட்டமைப்பைச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.
மஹல்லா ஜமாஅத்துகளின் மாண்பைப் போற்றுவதுடன், ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஏழை எளியவர்களுக்கு உதவிட பைத்துல்மால்கள் ஏற்படுத்துதல், சமுதாய மக்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளை காவல் நிலையம் - நீதிமன்றம் என செல்லாமல் ஷரீஅத் பஞ்சாயத்துக்கள் அமைத்து தீர்வு ஏற்படுத்துதல், ஓராசிரியர் பள்ளிகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இக்கூட்டம் சமுதாய பெருமக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி செயலாற்றிட வேண்டுகோள் விடுக்கிறது.
3. கட்டாய திருமண சட்டத்தின் மஸ்ஜித் பதிவு முறையை அங்கீகரிக்க வேண்டும்
இஸ்லாமிய திருமணங்கள் பல்லாண்டு காலமாக மஸ்ஜிதுகளில் காஜிகள், இமாம்கள், கத்தீபுகள் (ஙாயிப் காஜிகள்) களால் முறையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவு முறையையே கட்டாய திருமண பதிவு சட்டத்திலும் ஏற்று கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இக்கருத்தரங்கில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் நிர்வாகக்குழு அங்கத்தினரான ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு சித்தீக், மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், ஐக்கியப் பேரவை உறுப்பினர் ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், சரித்திர ஆய்வாளர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், மஸ்ஜித் மீக்காஈல் நிர்வாகி ஹாஜி முஹ்யித்தீன் தம்பி துரை, ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, எழுத்தாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட - காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான ஏ.கே.மஹ்மூத் சுலைமான், அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஜெ.உமர், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கத்தின் நிறைவில், வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினம் புறவழிச் சாலையிலுள்ள வாவு நகரில் பெண்கள் தொழுமிடம் - தைக்கா அமைப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் 5 ஆயிரத்து இருநூறு தொகையும், இக்கருத்தரங்கில் வசூலிக்கப்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து நூற்று முப்பது தொகையும் என மொத்தம் ரூபாய் 10 ஆயிரத்து முந்நூற்று முப்பது தொகை - அதன் பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |