நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், கடந்த ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் துவங்கி, இடைவெளியின்றி தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் விழுந்தவண்ணம் உள்ளது. தற்போது அங்குள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர் மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்துகொண்டிருக்கிறது.
குற்றால சீசன் களைகட்டியிருக்க, ரமழான் - நோன்பு மாதமும் நெருங்கிவிட்டதைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாரி சாரியாக குற்றாலத்தை நோக்கிப் படையெடுத்து, இன்பக்குளியலை முடித்தவர்களாக இல்லம் திரும்பியுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக, குற்றாலத்திலுள்ள - காயல்பட்டினம் மக்களுக்குச் சொந்தமான எல்.கே.எஸ். பங்களா, ஸ்டார் பங்களா, ஜமால் பங்களா, வாவு பங்களா, பல்லாக் பங்களா, நூர்தீன் பங்களா ஆகிய இடங்களையும், இதர வாடகை அறைகளையும் காயலர்கள் நிரப்பியிருந்ததைக் கண்டபோது, ஊரே இடம்பெயர்ந்துவிட்டதோ என்று நினைக்குமளவுக்கு, குற்றாலத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் காயல்பட்டினம் மக்கள் அணிவகுத்துச் செல்வதைக் காண முடிந்தது.
உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் கீழக்கரை, அதிராம்பட்டினம், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது.
குற்றாலத்திற்குச் செல்லும் பல காயலர்கள், செங்கோட்டையையடுத்துள்ள கேரள மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளான குண்டாறு அருவி, மணலாறு அருவிகளையும் விட்டு வைக்கவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், கேரள கட்டுப்பாட்டிலுள்ள - செங்கோட்டையையொட்டிய அனைத்து அருவிகளிலும் ப்ளாஸ்டிக் பொருட்கள், சோப்பு - ஷாம்புகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வெறுமனே அறிவிப்புப் பலகையோடு அத்தடை நின்றுவிடாமல், அனைத்து அருவிகளுக்குச் செல்லும் நுழைவாயிலிலும், அருவிக்கருகிலும் கேரள காவலர்கள் கண்காணித்தவண்ணம் இருப்பதால், யாரும் விதியை மீற முடியவில்லை.
இதன் காரணமாக, குளித்துக் கொண்டிருக்கும் அனைவரின் மீதும் பட்டு விழும் தண்ணீர் கூட மிகத்தூய்மையாக இருந்ததைக் காண முடிந்தது.
மாறாக, குற்றாலத்திலுள்ள சிற்றருவி, பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி என அனைத்தருவிகளிலும், சோப்பு - ஷாம்பு உறைகள் தேங்கிய குப்பைகள் மக்கி, சீழ் போல் வடிந்துகொண்டிருக்க, அதற்கிடையில் அருவித்தண்ணீரைத் தேடும் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. |