காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அந்த வரிசையில், நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சி, இம்மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகிய மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஜூன் 29 அன்று மதியம் 02.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அன்று மாலை 05.30 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இக்ராஃ துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி மூஸா ஸாஹிப், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரையைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
பின்னர், அவருக்கு இக்ராஃ - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் நினைவுப் பரிசு வழங்கினார்.
அடுத்து, இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் அறிமுகவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சார்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் மூத்த முன்னாள் செயலாளர் அலாவுதீன் ஐ.ஏ.எஸ். குறித்து, இக்ராஃ மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அறிமுகவுரையாற்ற, அவரைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார்.
பின்னர், அவருக்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் டைமண்ட் செய்யித் நினைவுப் பரிசு வழங்கினார்.
அத்துடன், மஃரிப் தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்த அமர்வு இரவு 07.00 மணியளவில் துவங்கியது. அவ்வமர்வில், இவ்விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் க.செயக்கண்ணு குறித்து அறிமுகவுரை வழங்கப்பட, அதனைத் தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றினார்.
பின்னர், அவருக்கு இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதனையடுத்து, இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - ப்ளஸ் 2 மாநில சாதனை மாணவர்கள் குறித்து அறிமுகவுரையாற்றப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்கள் எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகியோருக்கு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், தலா ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
பின்னர், மாநிலத்தின் முதன்மாணவர்களான எஸ்.அபினேஷ், எஸ்.ஜெயசூர்யா ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
பின்னர், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி அண்மையில் பணி நிறைவு பெற்ற காஜா முகைதீன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர், தமது பணிக்காலத்தில் இக்ராஃ மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் மாணவர் நல செயல்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பளித்தமைக்காக அவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், இந்நிகழ்ச்சிக்கு இணை அனுசரணையளித்திருந்த வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியின் சார்பில் அதன் முன்னாள் முதல்வரும், தற்போதைய டீனுமாகிய பேராசிரியர் அபூபக்கர், பெட் கல்லூரிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினம் வாழ்த்துரை வழங்கினார்.
அடுத்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தன் சார்பில் - சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அளித்ததுடன், மாநில சாதனை மாணவர்களுக்கு - இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு அவர் சால்வை அளித்து கண்ணியம் செய்தார்.
பின்னர், தமது பயண நேரம் நெருங்கியதையடுத்து, மாநில சாதனை மாணவர்கள் இருவரும் அரங்கு நிறைந்த கரவொலிக்கிடையில் விடைபெற்றுச் சென்றனர்.
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக, குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு மேலாண்மை பாடத்தில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எஸ்.ரத்னசூர்யாவுக்கு ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை, மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்,
திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்களுள் - ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்,
ப்ளஸ் 2 தேர்வில் 1000 மற்றும் அதற்கு மேலும், 1100 மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியர்,
ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் பாட வாரியாக நூறு சதவிகித மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியர்,
ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த கட் ஆஃப் (சிறப்புத் தேர்ச்சி) மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியர் ஆகியோருக்கு பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில், நடப்பாண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் அனைத்தையும் - சிறப்பு விருந்தினர்கள், மேடையில் முன்னிலை வகித்தோர் தம் கரங்களால் வழங்கினர்.
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மாணவ-மாணவியரின் பெற்றோர், பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், அதன் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி இணை அனுசரணையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு நிகழ்ச்சி குறித்த விரிவான விபரம் பிரிவு வாரியாக தனித்தனி செய்தியாக வெளியிடப்படும்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ |