பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காயல்பட்டினம் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை வரவேற்று, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜூலை 07 ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்ற - இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கிலும், மாலையில் ஏரல் நகரில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு கருத்தரங்கிலும் பங்கேற்று உரையாற்றுவதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய அரசின் மத்ரஸா கல்வி மேம்பாட்டுக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் சென்னை எழும்பூரிலிருந்து செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டு, நேற்று காலை 07.50 மணியளவில் காயல்பட்டினம் வந்தனர்.
அவர்களை, வரவேற்குமுகமாக, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி, நேற்று மதியம் 03.00 மணிக்கு, மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
மத்ரஸாவின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமை தாங்கினார். மாணவர் ஜெ.எஸ்.அல்தாஃப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மத்ரஸா மாணவர்கள் அரபி பைத் பாடியதைத் தொடர்ந்து, ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
அவர்களைத் தொடர்ந்து, மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி. ஆகியோர் வருகை தந்துள்ள நிலையில், அவர்களது இடைவெளியில்லாத நேர நெருக்கடிக்கிடையிலும் தமது மத்ரஸா நிர்வாகத்தின் அழைப்பையேற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தனதுரையில் கூறினார்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய அரசின் மத்ரஸா கல்வி மேம்பாட்டுக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் - மத்ரஸாவின் செயல்பாடுகளையும், மாணவர்களை மார்க்கக் கல்வியின்பால் ஊக்கப்படுத்த மத்ரஸாவால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்திட்டங்களையும் பாராட்டிப் பேசினார்.
அடுத்து, காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் வக்ஃப் வாரிய உறுப்பினரும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாஜி எம்.அப்துல் ரஹ்மான் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
தற்காலத்தில் லாப நோக்கில் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர் மார்க்க நலனுக்காக ஒரு மத்ரஸாவை பல்லாண்டு காலமாக நடத்தி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மிகுந்த பாராட்டிற்குரியது.
தொழில், பணி என ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு மக்கள் இயங்கி வரும் இக்காலகட்டத்தில், தனது வாழ்வையே இந்த மத்ரஸாவிற்காக அர்ப்பணித்து செயல்பட்டு வரும் முதல்வர் நூருல் ஹக் ஸாஹிப் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உலகில் பல கல்வி நிறுவனங்களைத் துவக்கலாம்… நடத்தலாம். இறைமறை திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு ஈடு இணை என எதையும் சொல்லிட முடியாது.
இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவோர் வாழ்த்துக்களைப் பெறுவது சொற்பமாகவே இருக்கும். பெரும்பாலும், “நமக்கு இது தேவையா?” என்று எண்ணுமளவுக்கு மன உளைச்சலைத் தரும் விமர்சனங்களைத்தான் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு இந்த மத்ரஸாவும் விதிவிலக்கல்ல என்பதையும் நான் கேட்டறிந்துகொண்டேன். அந்த விமர்சனங்களுக்குக் காது கொடுக்காமல், அல்லாஹ்வுக்காக செய்யும் பணி என்பதை மட்டும் மனதிற்கொண்டு இன்னும் தீவிரமாகக் களப்பணியாற்ற அவர்களை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஸாஹிப் அவர்கள் பற்றிய இரண்டு சரித்திரக் குறிப்புகளை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். இதைச் சொல்ல எத்தனிக்கும்போதெல்லாம் எனக்கு தொண்டை அடைக்கும். அழுகை வரும்.
ஒருமுறை துபையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்கள் வந்திருந்தபோது, பெயர் - முகவரியின்றி ஒரு மொட்டைப் பிரசுரம் வினியோகமாகிறது. அதில், சிராஜுல் மில்லத் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, பதவிக்காக அரசியல்வாதிகளிடம் கையூட்டு பெற்றுவிட்டார் என்றொரு வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பிரசுரம் தலைவர் அவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கண்ணுங்கருத்துமாக இருந்தும் அது அவர்களின் கவனத்திற்குச் சென்றுவிட்டது.
அவர்கள் மேடையில் பேசுகையில், “இங்கே ஒரு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது... அதில், அரசியல்வாதிகளிடம் நான் கையூட்டுப் பெற்றதாக வாசகம் உள்ளது...
நான் திருமறை குர்ஆனை என் நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தைப் பெறாதவன்... ஆனால், என் தந்தையார் ஆ.கா.அப்துல் ஹமீத் பாக்கவீ அவர்கள் தங்கள் வாயால் திருக்குர்ஆன் விரிவுரையைச் சொல்லச் சொல்ல, தாய்மொழி தமிழில் அதை முழுமையாக எழுதி முடித்த கரங்கள் இது... இந்தக் கரங்களால் ஒருபோதும் அந்தக் கேவலமான செயலைச் செய்ய மாட்டேன் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இல்லாத ஒன்றை எழுதியதற்காக அதில் தொடர்புடையவர்களை அல்லாஹ் மன்னித்து, அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக...” என்றார்கள் சிராஜுல் மில்லத் அவர்கள்.
நம்பினால் நம்புங்கள்! அடுத்த சில நிமிடங்களிலேயே ஒருவர் மேடையேறி வந்து, சிராஜுல் மில்லத் அவர்களின் கரம் பற்றி, தான்தான் அந்தத் தவறைச் செய்ததாகக் கூறி மன்னிப்புக் கேட்டுச் சென்றது வரலாறு.
அதுபோல, மற்றொரு வரலாற்று நிகழ்வையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்...
அதே துபையில் இன்னொரு முறை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள் சிராஜுல் மில்லத் அவர்கள். அன்றிரவு அவர்களுக்குத் துணையாக தங்கிட ஒருவர் முன்வருமாறு கேட்டோம்... திருமறை குர்ஆனை மனதில் ஏந்திய ஒரு ஹாஃபிழ் சகோதரர் முன்வந்தார். அவரை அறையில் வைத்துவிட்டு, சிராஜுல் மில்லத் அவர்களுடன் நாங்கள் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டோம்.
நிகழ்ச்சி முடிந்து, அறை திரும்பும்போது அந்த சகோதரர் - சிராஜுல் மில்லத் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிலில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் அவரை எழுப்ப எத்தனித்தபோது, சிராஜுல் மில்லத் அவர்கள், “அவரை எழுப்ப வேண்டாம்... அவர் நன்றாக உறங்கட்டும்... எனக்கு ஒரு பாயும், தலையணையும் தாருங்கள் என்று கேட்டு, அவரை எழுப்ப விடாமல் எங்களைத் தடுத்துவிட்டார்கள்.
சில மணித்துளிகளில் துடித்தெழுந்த அந்த ஹாஃபிழ் சகோதரர், தான் அலுப்பில் உறங்கிவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்டார்... “அதெல்லாம் தேவையில்லை... நீங்கள் கட்டிலிலேயே உறங்குங்கள்!” என்று தலைவர் கூறினார். அவர் பிடிவாதமாக மறுத்து, தரையிலிருந்த பாயில் படுக்க ஆயத்தமானார்.
உடனே சிராஜுல் மில்லத் அவர்கள், “திருமறை குர்ஆனை இதயத்தில் தாங்கிய ஒரு ஹாஃபிழ் தரையில் படுத்திருக்க, நான் அவருக்கு உயரமாக கட்டிலில் படுக்க விரும்பவில்லை... எனக்கும் ஒரு பாய் தாருங்கள்! நானும் அவருக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்கிறேன்” என்று கூறினார். நாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும், கடைசி வரை கட்டிலில் படுக்காமல், அந்தச் சகோதரருக்கு அருகில் தரையிலேயே படுத்துவிட்டார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஹாஃபிழ்களுக்கு அந்த கண்ணியம் உள்ளது. அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மிகுந்த கண்ணியத்திற்குரியவர்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டியது அந்தந்த ஊர் மக்களின் கடமை.
இந்த நிகழ்ச்சியை எனக்களிக்கப்பட்ட வரவேற்பாகக் கருதிக்கொள்ள நான் விரும்பவில்லை. உலகிலேயே உயர்ந்த கல்வி நிறுவனமான ஒரு திருக்குர்ஆன் மத்ரஸாவிற்கு ஒரு பார்வையாளனாக பாடம் பெறவே நான் வந்துள்ளதாகக் கருதி, எனதுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, ஹாஜி எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.
பின்னர் நிகழ்ச்சி தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ கூறியதாவது:-
நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சிராஜுல் மில்லத் அவர்களின் - ஹாஃபிழ்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளைக் கூறும்போது எனக்கொரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது...
1978ஆம் ஆண்டு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்பதற்காக காயல்பட்டினம் வந்திருந்த சிராஜுல் மில்லத் அவர்கள், குருவித்துறைப் பள்ளியின் அப்போதைய தலைவர் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதிர் ஹாஜி அவர்களின் இல்லத்தில் தங்கினார்கள். நான் மத்ரஸாவில் ஓதிக்கொண்டிருந்த காலம் அது. அவர்களுக்கு பணிவிடை செய்யும் வகையில் நான் அங்கே இருந்தேன்... என்னைப் பார்த்து, “தம்பி, நீ யாருடைய மகன்?” என்று கேட்டார்கள்.
அவர்கள் ஓர் அரசியல் பிரமுகர் என்பதால், நான் என் தந்தை பெயரைச் சொல்லாமல், என் பெரிய தந்தை பாவலர் அவர்களின் பெயரைக் கூறி, அவர்களது தம்பி மகன் என்றேன்... “என்னப்பா, உன் தந்தை பெயரைக் கேட்டால், பெரிய தந்தை பெயரைக் கூறுகிறாயே?” என்றார்கள். “பெரிய தந்தை அரசியல்வாதி என்பதால் அவர்களைச் சொன்னால் உங்களுக்குப் புரியுமே என்பதால்தான் நான் அவ்வாறு கூறினேன்” என்றேன். மீண்டும் என் தந்தை பெயரை அவர்கள் கேட்க, “சாவன்னா ஆலிம் அவர்களின் மகன்” என்றேன்.
வியப்புற்ற அவர்கள், “உனக்கு ஒன்று தெரியுமா? இந்த தமிழ்நாட்டில் தலைசிறந்த ஆலிம்களாக ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்தால், அதில் முதலாமவராக உங்கள் தந்தை இருப்பார்கள்... நாங்கள் அறிந்து வைத்துள்ள அளவுக்கு உனக்கு அவர்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...” என்றார்கள்.
மார்க்க அறிஞர்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துள்ளார்கள் என்பதை அந்நேரத்தில் நான் உணர்ந்துகொண்டேன்.
இவ்வாறு, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ கூறினார். பின்னர், ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை, ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஜெ.உமர், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் உட்பட கட்சியின் நிர்வாகிகளும், மத்ரஸா ஹாமிதிய்யாவின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், சிறப்பழைப்பாளர்களுக்கு, மத்ரஸா நிர்வாகத்தின் சார்பில் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
|