சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட - உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், அம்மன்றத்தின் திரளான உறுப்பினர்களுடன் - தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் – உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 2013 ஜூன் 29ஆம் தேதியன்று, Punngol Water Way Parks என்ற பூங்காவில், மாலை 17.30 மணி முதல் இரவு 20.30 மணி வரை நடைபெற்றது.
உறுப்பினர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காகவென்று மட்டுமே இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால், சிறப்பு நிகழ்ச்சிகள் என எதுவும் திட்டமிடப்படவில்லை. மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து மற்றும் பயணியர் பொதுப் பேருந்துகளில் உறுப்பினர்கள் தம் மனைவி - மக்களுடன் குறித்த நேரத்தில் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
குழந்தைகள் ஒருபுறம் பூங்காவிலுள்ள தண்ணீர் விளையாட்டுகளில் உற்சாகமாக ஈடுபட்டிருக்க, நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வாய்களுடன் உலவிய மகளிர் - தம் தோழியரைக் கண்ட மகிழ்ச்சியில் முகமலர்ச்சியுடன் அரட்டையில் நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தனர்.
மன்ற உறுப்பினர்களோ, பூங்காவிலுள்ள இயற்கைக் காட்சிகளை ஆவலுடன் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓத, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், சிறப்பு விருந்தினரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
பின்னர், சிறப்பு விருந்தினர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் - தனக்கேயுரிய நகைச்சுவை நடையில் சிற்றுரையாற்றினார்.
சிங்கை காயல் நல மன்றத்தின் அனைத்துறுப்பினர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க தனக்கு வாய்ப்புக் கிடைத்தது தனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனதுரையில் கூறினார்.
பின்னர், ‘ஷிஃபா’ செயல்திட்டம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் அவர் மன்ற அங்கத்தினருடன் கலந்துரையாடினார்.
பின்னர்,
>> பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரித்து வினியோகித்தல்
>> மன்றத்தின் கருவூலத்திற்கு ஜகாத் நிதியை அளித்தல்
>> சேமிக்கப்பட்ட உண்டியல்களை சேகரித்தல்
உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இரவு 19.20 மணிக்கு, மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. நிறைவில், மன்ற உறுப்பினர் ஐ.எம்.அப்துர்ரஹீம் (கைபேசி எண்: 8298 4374) இணை உரிமையாளராக இருக்கும் அன்னலக்ஷ்மி ஓய்வுணவகத்திலிருந்து தருவிக்கப்பட்ட இரவுணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டு, விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பின்னர், மனமகிழ் நினைவுகளுடன் உறுப்பினர்கள் தமது வசிப்பிடம் திரும்பினர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |