காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாத சாதாரண கூட்டத்திலிருந்து, பெருவாரியான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததற்கான காரணமாக, மே மாத துவக்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு:-
ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 05ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு உயர்நீதிமன்றம் தடை வழங்கியதைத் தொடர்ந்து நடந்த முதல் கூட்டம் அது.
உறுப்பினர்கள் கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஒரு குற்றச்சாட்டு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - கூட்டம் முடிந்தவுடன், மூன்று நாட்களுக்குள் - விதிகள்படி, தீர்மான நகலை மாவட்ட ஆட்சியரிடமும், திருநெல்வேலியிலுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரிடமும், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரிடமும் சமர்ப்பிக்காதது என்பதாகும்.
ஏப்ரல் 29 கூட்டம் முடிந்தவுடன், நகர்மன்றத் தலைவர் நகராட்சி ஆணையரிடம் தீர்மான நகலை ஆயத்தம் செய்து தருமாறு பலமுறை கேட்டதாகத் தெரிகிறது. நகர்மன்றத் தலைவரிடம் நகல் வழங்கப்படாத காரணத்தால், நகர்மன்றத்திற்கு நேரடியாகச் சென்ற நகர்மன்றத் தலைவர், அங்கிருந்த நகராட்சி அலுவலர் (ஃபிட்டர்) நிஸாரை அழைத்துக்கொண்டு, நகராட்சிக்கு எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் கூட்ட தீர்மானங்களை நகல் எடுத்துள்ளார்.
சில நிமிடங்களில் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் - ஜெராக்ஸ் கடைக்குள் நுழைந்து, நகர்மன்றத் தலைவரைப் புகைப்படம் எடுக்கத் துவங்கியுள்ளார். அதற்கான காரணத்தை நகர்மன்றத் தலைவர் அவரிடம் வினவுகையில், மாலை 06.00 மணிக்கு மேல் தீர்மான புத்தகத்தை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்றும், தற்போது 06.00 மணியை தாண்டிவிட்டதால், நகர்மன்றத் தலைவரின் செயல் விதிமீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.
நகர்மன்றத் தலைவரான தான் - அரசு உத்தரவிட்டுள்ள கடமையை (தீர்மான நகல்களை அதிகாரிகளுக்கு அனுப்புவது) செய்வதாகவும், தான் தனியாக தீர்மானப் புத்தகத்தை எடுத்து வரவில்லை என்றும், நகராட்சியின் அலுவலர் ஒருவருடன்தான் வந்திருப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் - ஜெராக்ஸ் கடை வாயிலில் நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும், ஊடகத்தினர் சிலரும் அங்கு கூடி, நகர்மன்றத் தலைவரை விமர்சித்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்துள்ளனர்.
பதட்டமான இச்சூழலில் நகர்மன்றத் தலைவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார், சில நிமிடங்களில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்த பின்னர், நகராட்சி அலுவலர் நிஸார், தீர்மான புத்தகத்தை நகராட்சி அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிகழ்வு குறித்து ஆறுமுகநேரி காவல்நிலையத்தில், நகர்மன்றத் தலைவர் அன்றிரவே புகார் மனு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி காவல்நிலைய ஆய்வாளர் டி.பார்த்திபன், திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆயினும், ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் தலையீட்டினால் காவல்துறையினர் - நகர்மன்றத் தலைவரின் புகாரின் அடிப்படையில் முதல் தகவலறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை என தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, இதுகுறித்த மேல் நடவடிக்கைக்காக - நகர்மன்றத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை ஜூன் மாதம் நாடினார். |