இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்படும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தலாக் - மனமுறிவு சான்றிதழ் வழங்க, காஜி (நாயிப் காஜிகள் என்ற கத்தீப், இமாம்)களுக்கு அதிகாரமில்லை; அவற்றை நீதிமன்றங்களே முடிவு செய்ய வேண்டும் என, தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பதர் சயீத், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொதுநல வழக்கை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, இஸ்லாமிய கட்டமைப்பைக் காப்பாற்றும் வலுவான வாதங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களுக்கு - இஸ்லாமிய திருமண மற்றும் மணமுறிவு சட்டங்கள் குறித்து போதிய விபரங்களை அறியச் செய்திட வேண்டும் என்ற நோக்குடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், இன்ஷாஅல்லாஹ் - இம்மாதம் 07ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10.00 மணிக்கு, “இஸ்லாமிய திருமண சட்ட விளக்கக் கருத்தரங்கம் இதன்கீழ் தரப்பட்டுள்ள பிரசுரத்தில் கண்ட நிகழ்முறைப்படி நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கின் அவசியத்தை உணர்ந்தவர்களாக - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்து பயனடையுமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை, நகர பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |